தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக அறியப்படும் பெசண்ட் ரவியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து சிறு பகுதி...
”நான் நடிகனாக இருந்தாலும் ஏதாவது தொழில் பண்ண வேண்டும் என்ற ஆசை ஆரம்பத்தில் இருந்தே உண்டு. இடையிடையே நிறைய பிசினஸ் பண்ணிக்கொண்டு இருந்தேன். இப்போது என்னுடைய நண்பருடன் இணைந்து பெசன்ட் நகரில் ரெஸ்டாரண்ட் தொடங்கியிருக்கேன். ஹோட்டல் தொழில் ரொம்பவும் மனநிறைவான விஷயமாக இருக்கிறது. கடைக்கு வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்கு சார் என்று சொல்லிவிட்டு போகும்போது ஏற்படும் உணர்வு ரொம்பவும் பிடித்திருந்தது.
இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினரைப் பார்க்க பாவமாக உள்ளது. என்னதான் ஹைஜீனிக்கான உணவு நீங்கள் சாப்பிட்டாலும் சாப்பிடும் பாதி உணவு ஹைபிரிட் உணவாகத்தான் உள்ளது. இதை நாம் ஒன்றுமே பண்ண முடியாது. ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு, நல்ல படிப்பு, விளையாட்டு இருந்தாலே அவர் நல்ல நிலையை அடைந்துவிடுவார். நாடும் நல்ல நிலையை அடையும். எனவே உணவு ரொம்ப முக்கியம். இந்த விஷயத்தில் அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய தலைமுறையினர் சின்ன வயதிலேயே சுகர், பீ.பீ.,மன அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளனர். இது எங்கு போய் முடியும் என்றே தெரியவில்லை.
அஜித் சார் உணவு, ஃபிட்னெஸ் விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருப்பார். அவருக்கு பிடித்த விஷயம் என்றால் அதைப் பற்றி தெரிந்துகொள்ள எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவழிப்பார். ஒருமுறை என் நண்பருடன் சென்று அவரைச் சந்தித்தபோது சில வகை உணவுகளை எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டு நோட்ஸ் எடுத்துக்கொண்டார்.
விஜய் சாரும் ஃபிட்னெஸ் விஷயத்தில் கவனமாக இருப்பார் என்று நினைக்கிறேன். அவர் வொர்க்அவுட் செய்து இதுவரை நான் பார்த்ததில்லை. ஆனாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். சரத்குமார் சாரும் ஃபிட்னெஸ் விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருக்கக்கூடியவர். இந்த வயதில் அவர் உடம்பை கட்டுகோப்பாக வைத்திருப்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை. பொன்னியின் செல்வனில் அவர் லுக்கை பார்த்ததும் ஆச்சர்யமாக இருந்தது”.