/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/80_19.jpg)
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் பீஸ்ட் படத்திற்கு 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளும், கே.ஜி.எஃப் படத்திற்கு 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து நடிகர் யாஷிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த யாஷ், "8 மாதங்களுக்கு முன்பாகவே கே.ஜி.எஃப் படத்தின் ரிலீஸ் தேதியை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். எந்தப் படத்துடன் சேர்ந்து நம் படம் ரீலீஸாகும் என்றெல்லாம் எங்களுக்கு அப்போது தெரியாது. விடுமுறை நாட்களில் இரண்டு மூன்று படங்கள் சேர்ந்து வெளியாவது என்பது இயல்பானதுதான். ஒரு மாநிலத்தில் பெரிய நடிகர் படம் வெளியாகிறது என்றால் அந்த நடிகரின் படத்திற்குத்தான் அதிக திரையரங்குகள் கிடைக்கும். கர்நாடகாவில் கே.ஜி.எஃப் படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளன. படம் நன்றாக இருந்தால் திரையரங்குகள் அதிகரிக்கும்" எனத் தெரிவித்த யாஷ் பின்னர் சுதாரித்து "அதற்காக மற்றொரு படத்திற்கு திரையரங்குகள் குறையும் என்று சொல்லவில்லை" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய யாஷ், "படத்திற்கு என்ன தலைவிதி இருக்கிறதோ அதன்படி நடக்கும். படம் நன்றாக இருந்தால் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)