Advertisment

“இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது?”- புது தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கிய பாரதிராஜா!  

barathiraja

இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் ஒன்று உருவாக இருப்பதாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளித்து பாரதிராஜா அறிக்கை ஒன்றை சனிக்கிழமை இரவு வெளியிட்டிருந்தார். மேலும் அதில், “நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்றத் தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். திரைப்படங்கள் எந்த விதப் பிரச்சினையின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பலரது கோரிக்கை, அதற்கு சுய நலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்கம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே.

Advertisment

அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும்... புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது.

தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிசளிப்பவள். தனக்குள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. தாய்க்கு ஒரு பிரசவம் எப்படி வலிக்குமோ அதே வலி பிள்ளைக்கும் இருக்கும். தாயிலிருந்து இன்னொன்றாய் பிரியும் குழந்தைக்கு உள்ள பெருவலியை இங்கு யாருமே பேசுவதில்லை. அதன் வலியை அப்பிள்ளை வெளிப்படுத்தாதால், அவ்வலியை நாம் உணராமலே போய்விடுகிறோம். ஆனாலும் நான் வெளிப்படுத்தத் தெரிந்த குழந்தை. இன்னொரு சங்கம் என்ற குழந்தை முயற்சி எனக்கு வலிக்கவே செய்கிறது. வலிக்க வலிக்கவே பிறக்க வேண்டியதும் அவசியமாகிறது.

கடந்த எனது அறிக்கையில் சக தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசித்தான் இன்னொரு சங்கம் பற்றி முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன்.

அடிப்படைப் பேச்சு வார்த்தைகளின் போதே செய்திகள் காற்றில் கசியத் தொடங்கி சில கருத்து வேறுபாடுகளைப் பரப்பத் தொடங்கிவிடுகின்றன.

முழுமையான முடிவெடுக்கும் முன் காதுகள் முந்திக் கொண்டுவிடுகின்றன.இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது.

ஒரு மடை அடைத்துக் கொண்டால் இன்னொரு மடையைத் திறப்பது போல்தான் இதுவும். நாம் செயல்பட்டே ஆண்டுகளாகிவிட்டன.

பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக் குறி எல்லாவற்றிற்கும் பதில் தேடுவது முக்கியம்.

தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவள் அப்படியே மெருகுற இருப்பாள். திரை வீட்டின் ஆளுமை அவள்தான். அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை. பிரித்தெடுக்கவும் இல்லை. இது செயல்பட வேண்டிய காலகட்டம்.

கரோனாவினால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது.

கையைப் பிசைந்து கொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது? அதனால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து மற்ற நிர்வாகிகள் குழுவினர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். பாரதிராஜாவாகிய எனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்குகிறோம்.

இதைப் பிரித்தாள்கிறோம் என யாரும் நினைக்க வேண்டாம். சில முக்கிய முடிவுகளுக்காய் உழைக்க இருக்கிறோம்.

நிறைவாக சொல்வதென்றால், இப்பிறப்பின் செயல்பாடுகள் சினிமாவின் ஆரோக்கியம் கருதியே தொடங்குகிறது!

பிள்ளைகளும், தோழர்களும், இணை வயதினரும், என்னை மூத்தோரும் இந்த அவசியத்தை இக்கட்டான சூழல் கருதி புரிந்துகொள்ள வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

barathiraja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe