உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்கா கரோனா வைரஸால் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
இந்தியாவிலும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே 3ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கில் பல நிபந்தனைகளை வைத்து தனி கடைகளையும், மதுபான கடைகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சினிமா துறையிலுள்ள தயாரிப்பு சங்கம் சார்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என்று ஃபெப்சி மற்றும் தயாரிப்பாளர்களால் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், திரைப்பட தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை தொடங்க வரும் 11 ஆம் தேதி முதல் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதனை தொடர்ந்து அரசிடம் வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர்கள் குழு நன்றி தெரிவித்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா முதலமைச்சருக்கும், ஊடகத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசின் இந்த அனுமதியால் தமிழ் சினிமா மூச்சு விட தொடங்கியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.