Advertisment

நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் - பாரதிராஜா வேண்டுகோள்!

barathiraja

Advertisment

கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து சினிமா ஷூட்டிங் தொடங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் நடிகர்கள் தங்களின் 30% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

அதில், “தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாகச் சமூக இடைவெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணிசெய்யுங்கள்.

திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீளுதலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.

Advertisment

கரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களைமுடித்து திரைக்கு கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும்.

அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கள் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை,அதற்கான வட்டிப் பெருக்கம் இதெல்லாம் தயாரிப்பாளரின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ்சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும்.

தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின் இந்தக் கடினமான சூழ்நிலையை உணர்ந்து, ஏற்கனவே சில நடிகர்கள், ஒப்பந்தம் செய்துகொண்ட சம்பளங்களிலிருந்து 30 சதவீதம் குறைத்துக் கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள்.

அவர்களைப் பாராட்டும் இந்தத் தருணத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்துநடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா?

Ad

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத்துறையில் அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் தாமே முன்வந்து தங்களின் சம்பளங்களில் 30 முதல் 50 சதவீதத்தை விட்டுக் கொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இது நடக்க வேண்டாமா?

எல்லோரையும் கேட்கவில்லை. ரூபாய் பத்து இலட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைந்த பட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை (30%) விட்டுக் கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துத் தருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன்.

இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. அது நீங்கள் உங்கள் சம்பளங்களைப் பேசி ஒத்து வந்தால் வேலை செய்யப் போகிறீர்கள். ஆனால், முடிவடைய வேண்டிய படங்களுக்கு உங்கள் பங்களிப்பைக் கொடுத்து 30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து சினிமா உலகம் மீண்டெழ உதவகேட்டுக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். மீண்டெழ கைகள் கோர்ப்போம். சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் வாழவைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

barathiraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe