
ஜூன் 21ம் தேதி உலக இசை தினத்தை முன்னிட்டு டோக்யோ தமிழ் சங்கம், கங்கை அமரனுக்கு பாராட்டு விழா ஒன்றை வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் நடத்தியது. இதில் இயக்குனர் பாரதிராஜா, சந்தானபாரதி, மனோபாலா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் கங்கை அமரனை வாழ்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அப்போது இயக்குனர் பாரதிராஜா, கங்கை அமரனுடனான தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அதில், "இந்த உலகத்தில் உன்னை மாதிரி வெள்ளந்தியானவன், வெளிப்படையானவன் யாருமே இல்லை. அண்ணன் - தம்பிகளில் நீ ஒரு வித்தியாசம். முதல் பாட்டிலேயே கங்கை நதியைப் பற்றியெல்லாம் எழுதியிருப்பார். நீ எல்லாம் கங்கை நதியைப் பார்த்திருப்பாயா. ஆனால் யோசனை செய்தி எழுதியிருக்கிறாய் பார்த்தியா அதுதான் முக்கியம். என்னுடைய படத்தில் இடம்பெற்ற உன்னுடைய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். கல்யாணம் செய்து 2 அற்புதமான குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கிறான்" என்று பேசினார்.
மேலும் வெங்கட் பிரபுவின் திரைப்பட தொழில்நுட்ப யுக்திகள் குறித்தும் மேக்கிங் குறித்தும் புகழ்ந்து பேசிய பாரதிராஜா, வெங்கட் பிரபுவின் படத்தில் ஒரு வாரம் துணை இயக்குனராக பணிபுரிய வேண்டும் என நினைத்தாக தெரிவித்தார்.