Advertisment

பாலுமகேந்திராவின் நிறைவேறாத ஆசை!

balu mahendra

Advertisment

கேமரா கவிஞர் என்று கொண்டாப்படும் பாலுமகேந்திரா இலங்கையில் பிறந்த தமிழர். ஆனாலும், அவர் ஈழப்பிரச்னை பற்றி எதையும் அவர் தனது படைப்புகளில் பதிவு செய்ய வில்லை என்ற விமர்சனம் உண்டு. இது குறித்த கேள்வி ஒன்றுக்கு, ’’பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு. ஆனால், அதிகபட்ச நேர்மையுடன் சொல்லப்பட வேண்டிய விசயம் இது. வியாபாரத்தைத் தாண்டியது. படைப்பாளிகள் தயார் தான். அப்படி ஒரு படத்தை தாங்கும் தயாரிப்பாளர் எங்கே?’’என்று பதிலளித்திருக்கிறார்.

’’சாவதற்குள் ஈழப்பிரச்சனை பற்றி ஒரு திரைப்படத்தை எடுத்துவிட வேண்டும். அதுதான் எனது கடைசி படைப்பாக இருக்க வேண்டும்’’ என்றும் சொல்லிவந்தார். அது கடைசிவரை நடக்கவே இல்லை.

சிங்களர்களால் தமிழர்கள் ஒடுக்கப்பட்டதை சிறு வயதிலேயே அறிந்தவர் பாலுமகேந்திரா. கவிஞர் காசி ஆனந்தனும், கேமரா கவிஞர் பாலுமகேந்திராவும் இலங்கை மட்டக்களப்பில் இருந்த போது பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். இருவரும் இணைபிரியா நண்பர்கள். கல்லூரியிலும் இருவரும் ஒன்றாக படித்தவர்கள். அழியாத கோலங்களில் வரும் மூன்று சிறுவர்களின் ஒருவர் காசி ஆனந்தன் என்று பாலுமகேந்திராவே சொல்லியிருக்கிறார்.

Advertisment

“நானும் பாலுமகேந்திராவும் எங்கள் ஊரில் இனக்கலவரம் பெரிதாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் எங்கள் வீட்டிலிருந்து நான் சைக்கிளை எடுத்துகொண்டு வருவேன். நான் ஓட்டுவேன் பின் இருக்கையில் பாலு மகேந்திரா இருப்பார். இருவரும் அப்படித்தான் ஒருநாள் சைக்கிளிலேயே சென்று, இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடாது, கொடியேற்றக்கூடாது என்று புறக்கணிப்புப் போராட்டம் செய்தோம். அப்போது ஒரு கல்லூரியில் மட்டும் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதை அறிந்த நானும் பாலுவும் அங்கு சைக்கிளில் சென்றோம். பாலு மகேந்திரா சைக்கிளில் இருந்து கொண்டே கல்லூரியை நோக்கி கை குண்டை வீசினார். கல்லூரி சேதமடைந்து பலர் படுகாயம் அடைந்தனர். அதைப் பற்றி நாங்கள் கவலைப் படவில்லை’’ என்று காசி ஆனந்தன் சொன்னதாக ஒரு பதிவு இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இது குறித்து ஒரு விழாவில் பேசியுள்ளார்.

’’நம்பிக்கையோடு இருப்போம். தன்னம்பிக்கை ஒளிதான் ஒருநாள் விடியலைத்தரும்’’ என்று இனக்கொடுமையிருந்து மீள கடைசிவரை இன உணர்ச்சியாளராய் பாலுமகேந்திரா இருந்தார் என்பது உண்மையே.

balu

1939 மே 19 ஆம் நாள் இலங்கையில் மட்டக்களப்பு அருகிலுள்ள அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா, லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்து புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை படித்தார். 1971இல் ஒளிப்பதிவுக் கலையில் தங்கப் பதக்கம் பெற்றார். அதன் பின்னர் ’நெல்லு’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனார். அப்படத்துக்கு 1972 ல் சிறந்த ஒளிப்பதிவுக்கான கேரள மாநில விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களுக்கு தொடர்ந்து ஒளிப்பதிவு செய்தார். இவர் ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977இல் வெளியானது. கன்னடத்தில் 1977இல் ’கோகிலா’ என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். தமிழில் 1978ல் ‘அழியாத கோலங்கள்’ மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தார். ’’வீடு’, ‘சந்தியாராகம்’, ‘மூன்றாம் பிறை’, ’மூடுபனி’, ‘ரெட்டை வால் குருவி’, ’மறுபடியும்’, ‘ஜூலி கணபதி’, ’வண்ண வண்ண பூக்கள்’ என சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்து வைத்தவர்.

ஊட்டியில் எந்தப்பக்கம் கேமரா வைத்தாலும் அழகாக இருக்கும் என்பார்கள். அதிலும், இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்தும் பாலுமகேந்திராவின் படைப்புகளில் ஊட்டியும் ஒரு கதாபாத்திரங்களாகவே இருக்கும். இந்த ஒளிக்கலைஞரின் ஒளி 13.2.2014 அன்று மறைந்தாலும், திரையுலகில் அவரது படைப்புகள் என்றும் அழியாத கோலங்கள்.

balu mahendra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe