கபடி விளையாட்டை மையமாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் இதுவரை வெளியாகி அதில் பெரும்பான்மையான படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்திருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது மலையாளத்திலிருந்து கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு பேன் இந்திய திரைப்படமாக வெளியாகி இருக்கும் இந்த பல்டி திரைப்படம் போதிய வரவேற்பை பெற்றதா, இல்லையா?  

Advertisment

தமிழக கேரள எல்லையில் இருக்கும் பாலக்காடு அருகே இருக்கும் ஊரில் பஞ்சமி ரைடர்ஸ் என ஒரு கபடி டீமை உருவாக்கி அதில் நாயகன் ஷேன் நிகம், சாந்தனு முக்கிய பிளேயர்களாக திகழ்ந்து வருகின்றனர். தங்கள் டீமை எதிர்க்கும் எந்த அணிகளாக இருந்தாலும் அசால்டாக காலி செய்து விட்டு கோப்பையை தட்டிச் சென்று விடுகின்றனர். பொற்றாமரை என கபடி டீம் வைத்துக் கொண்டு இருக்கும் கந்து வட்டி பிசினஸ் செய்யும் வில்லன் செல்வராகவன் அவர் அணியை ஜெயிக்க வைப்பதற்காக பெரிய தொகை கொடுத்து தங்கள் அணியில் ஷேன் நிகமையும், சாந்தனையும் வந்து விளையாட வலியுறுத்துகிறார். இருவரும் செல்வராகவன் அணியில் இணைந்து விளையாடி மாஸ் காட்டுகிறார்கள். அதனோடு செல்வராகவனுடன் இணைந்து கொண்டு அவரது வட்டி பிசினஸுக்கும் உதவியாளர்களாக சேர்ந்து விடுகின்றனர்.

Advertisment

ஸ்போர்ட்ஸ் மேனாக இருக்கும் இவர்கள் செல்வராகனுக்காக கூலிப்படையாக மாறுகின்றனர்.  இது ஒரு கட்டத்தில் ஷேன் நிகமுக்கு பிடிக்காமல் போக தன் காதலி ப்ரீத்தி அஸ்ராணியின் அண்ணனை வஞ்சித்த செல்வராகவனுக்கு எதிராக திரும்புகிறார். இதற்கிடையே கந்துவட்டி விடும் பிசினஸ் செய்யும் செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமா ஆகியோருக்கு தொழில் போட்டி ஏற்படுகிறது. இதில் ஒருவரை ஒருவர் காலி செய்ய திட்டமிடுகின்றனர். இதையடுத்து நாயகன் ஷேன் நிகம் செல்வராகவனுக்கு எதிராக திரும்பியதை குழப்பத்தில் இருக்கும் சாந்தனுவை வைத்து பயன்படுத்திக் கொள்ளும் பூர்ணிமா இவர்களை வைத்து செல்வராகவனையும் அல்போன்ஸ் புத்திரனையும் காலி செய்ய ஒரு கேம் ஆடுகிறார். அந்த கேம் என்ன? கபடி விளையாட்டிலிருந்து ரவுடிசத்துக்கு தடம் மாறிப்போன ஷேன் நிகம் மற்றும் சாந்தனு ஆகியோரின் நிலை என்னவானது? என்பதே பல்டி படத்தின் மீதி கதை.    

படம் ஆரம்பிக்கும் பொழுது இது ஒரு ஸ்போர்ட்ஸ் படமாக இருக்குமோ என எண்ணி திரைப்படத்திற்குள் சென்ற பிறகு அது வேறு ஒரு திசையில் தடம் மாறி முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக மாறி இருக்கிறது. முதல் பாதி முழுவதும் விளையாட்டு சண்டை காதல் சண்டை விளையாட்டு சண்டை என நகரம் திரைப்படம் இரண்டாம் பாதியில் இருந்து பழிவாங்கும் படலம் கொண்ட படமாக மாறுகிறது. குறிப்பாக முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாகவும் ரசிக்க வைக்கும் படியும் நகர்ந்து பரபரப்பாக முடிந்து இருக்கிறது.

Advertisment

படத்தில் பல்வேறு லாஜிக் ஓட்டைகள். படம் எந்த கதையை சொல்ல நினைக்கிறது. நட்பா காதலா துரோகமா சண்டையா எதை ரசிகர்கள் பாலோ செய்ய வேண்டும் என குழப்பம் ஒரு பக்கம் ஏற்பட சொல்ல வந்த கதையை எங்கெங்கோ பாதை மாறி திசை மாறி எப்படி எல்லாமோ கொண்டு போய் ஏதோ ஒரு வகையில் விறுவிறுப்பாக கதை நகர்த்தி கூறியிருக்கிறார் இயக்குனர் உன்னி சிவலிங்கம். இந்தப் படத்தில் விளையாட்டு சம்பந்தப்பட்ட காட்சிகளையும் ஆக்சன் காட்சிகளையும் பிரதான காட்சிகளாக படம் பிடித்து அதை வைத்து படத்தை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். அதற்கு ஓரளவு பலனும் கிடைத்திருக்கிறது. இருந்தும் படத்தில் அழுத்தமான கதை கரு இல்லாதது சற்று ஏமாற்றமே. வெறும் ஆக்சன் காட்சிகளை மட்டுமே வைத்துக் கொண்டு முழு படத்தை ரசிக்க வைக்க முடியுமா என்றால் சற்று சந்தேகமே.

கபடி விளையாட்டில் இருக்கும் வீரர்கள் அந்த விளையாட்டின் டெக்னிக்கை வைத்து சண்டை செய்கின்றனர் என்ற புதுமையான விஷயத்தை வைத்துக்கொண்டு அதனை சுற்றி கதையை உருவாக்கி அதனுள் விறுவிறுப்பான திரைக்கதையை பின்னி பிணங்கி கொடுத்த இயக்குனர் கதை கருவுக்கு இன்னும் கூட முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். அதேபோல் இது ஒரு மலையாள சினிமாவாக உருவாகியிருந்தாலும் காட்சி அமைப்புகள் தமிழ் பட சாயலில் இருப்பது புதுமையாக இருக்கிறது.   நாயகன் ஷேன் நிகம் தனது 25 வது படத்தில் ஆக்சன் காட்சிகளிலும் கபடி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.

அழகான நாயகன் துருதுருப்பான நடிப்பு சிறப்பான ஆக்சன் காட்சிகள் நேர்த்தியான ஸ்போர்ட்ஸ் காட்சிகள் என தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். இவரது நண்பராக வரும் சாந்தனு கிரே ஷேடில் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிப்பில் பல்வேறு வெர்சிட்டைல் ஆக்டிங்கை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு குறிப்பாக ப்ளூ ஸ்டார் படத்திற்கு பிறகு சாந்தனவுக்கு நல்ல வேடம். அதை சரியான முறையில் பயன்படுத்தி இருக்கிறார். நாயகி ப்ரீத்தி அஸ்ராணி வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். வில்லன் செல்வராகவன் வில்லத்தனத்தில் பல்வேறு பரிணாமங்களை காண்பித்து மிரட்டி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான வில்லத்தனத்தை மலையாள சினிமாவில் காண்பித்திருக்கும் இயக்குனர் அதையும் செல்வராகவனை வைத்து உருவாக்கி இருக்கும் இயக்குனர் அதை திறன் பட கையாண்டு இருப்பது செல்வராகவனின் நடிப்பில் சிறப்பாக தெரிகிறது. காட்சிக்கு காட்சி எந்தெந்த இடங்களில் எவ்வளவு வில்லத்தனம் காட்டவேண்டுமோ அதை சிறப்பான முறையில் காண்பித்து தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார் செல்வராகவன். சில காட்சிகளை வந்தாலும் அல்போன்ஸ் புத்திரன் தாதாவாக மிரட்டி எடுத்திருக்கிறார். அதேபோல் டபுள் கேம். ஆடும் தாதாவாக வரும் பூர்ணிமா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகன் உடைய இன்னொரு இரண்டு நண்பர்களாக வரும் நடிகர்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து வலு சேர்த்து இருக்கின்றனர். மற்றபடி படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் அனைவருமே சிறப்பான நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கின்றனர்.  

இப்பொழுது அடுத்த அனிருத் என பெயர் எடுத்திருக்கும் சாய் அபியங்கர் இசையில் பாடல்கள் இந்த கால 2 கே கிட்ஸ்களுக்கு ஏற்றார் போல் துள்ளலாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஜால காரி பாடல் சிறப்பு. பின்னணி இசையில் ஏனோ வாசித்து தள்ளி இருக்கிறார். தனக்கு இசை நன்றாகத் தெரியும் என நிரூபித்திருக்கும் இவர் கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் வாசித்தே தள்ளி இருக்கிறார். அது பல இடங்களில் ரசிக்கும்படி இருந்தாலும் சில இடங்களில் எரிச்சல் ஏற்படுத்தும்படி இருக்கிறது. அதை தன் முதல் படமாக இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் சாய் சரி செய்து கொள்ள வேண்டும் இனிவரும் காலங்களில். மற்றபடி இந்த கால ட்ரெண்டிக்கு ஏற்ப துள்ளலான இசையை கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் மற்றும் கபடி சம்பந்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் காட்சிகள் குறிப்பாக இரவு நேர காட்சிகள் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இவரின் சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.   சிறப்பான மேகிங், பரபரப்பான கபடி விளையாட்டு, அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகள் என விறுவிறுப்பான காட்சிகளை மட்டும் நம்பி படத்தை கொடுத்திருக்கும் இயக்குனர் கதை கருவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதேசமயம் பல்வேறு லாஜிக் மீறல்களையும் சரி செய்திருந்தால் இன்னமும் இந்த பல்டி திரைப்படம் சிறப்பாக பல்டி அடித்திருக்கும்.  

 பல்டி - உயரம் குறைவு!