“நான் இறந்தால் பாலா தான் காரணம்” - மருத்துவமனையில் இருந்து பேசிய முன்னாள் மனைவி

353

தமிழில் 'அன்பு', 'காதல் கிசு கிசு' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் பாலா. மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருகிறார். தமிழில் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். மேலும் ரஜினியின் 'அண்ணாத்த' படத்திலும் நடித்திருந்தார். இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ஆம் ஆண்டு கல்லீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
 
கடந்த ஆண்டு தனது தாய்மாமன் மகள் கோகிலாவை திருமணம் செய்து கொண்டார். இது இவருக்கு நான்காவது திருமணம். இதற்கு முன்பாக முதலில் சந்தன சதாசிவ என்பரை பாலா திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாடகி அம்ருதா சுரேஷை திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இதையடுத்து மூன்றாவது முறையாக டாக்டர் எலிசபத் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திருமணம் பதிவு செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் மூன்றாவது மனைவியாக சொல்லப்படும் எலிசபத், தான் இறந்தால் பாலா தான் காரணம் என கூறியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும் சூழலில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த நிலைமையில் நான் வீடியோ எடுக்க விரும்பவில்லை. இருப்பினும் என்னால் நிறைய விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு நிறைய மிரட்டல்கள் வருகிறது. அவர்கள் எனக்கு கல்யாணமே ஆகவில்லை என்று பேசுகிறார்கள். அது எல்லாம் என்னுடைய கற்பனை என்கிறார்கள். ஆனால் அவர் ஏன் என்னை மனைவி என்று அனைவரின் முன்னிலையிலும் அறிமுகப்படுத்தினார். 

ஒரு வேளை நான் இறந்தால் பாலா தான் முழு பொறுப்பு. காவல் துறையிடம் இது பற்றி புகாரளித்தேன். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. இதனை முதல்வர் பினராயி விஜயனிடமும் புகாராக கூறியிருக்கிறேன். அதனடிப்படையில் காவல் அதிகாரியும் என் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினார். அதன் பிறகு எந்த தகவலும் அவரிடம் இருந்து வரவில்லை. நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடந்து கொண்டு வருகிறது. பல முறை பாலாவும் அவர் தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை. ஆனால் எனக்கு எதிரான மனுவில் தன்னிடம் பணமே இல்லை என சொல்கிறார். அவர் ரூ.250 கோடிக்கு சொந்தம் கொண்ட நபர். மனுவில் நானும் அவரும் டாக்டர் நோயாளி உறவு மட்டுமே என சொல்கிறார். ஒரு பெண் வழக்கு தொடர்ந்தால், அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மக்கள் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என் பிரச்சனை குறித்து சமூக வலைதளங்களில் பேசியிருக்கிறேன், முதல்வரிடமும் புகார் அளித்துள்ளேன். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனாலும் எனக்கு நீதி கிடைக்கவில்லை.  

பாலா என்னை ஏமாற்றிவிட்டார். உடல் ரீதியாக என்னை துன்புறுத்தினார். ஆனால் மீடியா முன் என்னைப் பற்றி அவதூறு பரப்பினார். அவர் மட்டுமல்ல, அவரது மொத்த குடும்பமும் தான். எப்படியாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் இந்த வீடியோவை பதிவு செய்கிறேன். பெண்களுக்கு நீதி கிடைக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் இப்போது பணக்காரர்களுக்கும் அதிகாரம் உள்ளவர்களுக்கும் மட்டுமே நீதி கிடைக்கும் என்று நான் உணர்கிறேன்” என்றுள்ளார். 

Will I get justice before I die

Posted by Elizabeth Udayan on Tuesday, July 15, 2025
Actor Bala
இதையும் படியுங்கள்
Subscribe