ADVERTISEMENT

பாலகுமாரன்... நீங்க நல்லவரா, கெட்டவரா? - பட்டிதொட்டியெல்லாம் கலக்கிய வசனங்கள்  

03:29 PM May 15, 2018 | vasanthbalakrishnan

எழுத்தாளர் பாலகுமாரன், தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் எழுத்தாளர்களில் ஒருவர். 'சூப்பர் ஸ்டார்' என்றால் உண்மையிலேயே சூப்பர் ஸ்டார், அந்த அளவுக்கு விற்பனை, ரசிக மனநிலையில் வாசகர்கள், மன்றங்கள், ஏழு நாட்கள் வெளிவரும் ஏழு இதழ்களில் ஒரே நேரத்தில் தொடர்கள் எழுதியது, 'இவரெல்லாம் இலக்கியவாதியே அல்ல, எழுதுவதெல்லாம் குப்பை' போன்ற சிறு பத்திரிகை இலக்கியவாதிகளின் கடும் விமர்சனம் என அத்தனையும் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் எழுத்தாளர் பாலகுமாரன்.

ADVERTISEMENT



'மெர்க்குரி பூக்கள்' படித்துவிட்டு பாலகுமாரன் பைத்தியம் பிடித்த வாசகிகள் ஏராளம். 'உடையார்', 'ராஜேந்திர சோழன்' என சரித்திர வகை கதைகளிலும் தடத்தைப் பதித்தவர். இவருக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆதரவு இருந்ததோ, இலக்கியவாதிகள் மத்தியில் அந்த அளவுக்கு எதிர்ப்பும் இருந்தது. இவரது சொந்த வாழ்க்கையும் விமர்சனத்துக்கு தப்பவில்லை. பல புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் போலவே இவரது வாழ்க்கைமுறையும் 'நீங்க நல்லவரா, கெட்டவரா?' என்று கேட்கத்தக்க வகையில்தான் ஆரம்பத்தில் இருந்தது. பிற்காலத்தில் ஆன்மிகத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

ADVERTISEMENT



கைபேசி, இணையம், யூ-ட்யூப் போன்ற சிற்றின்பங்கள் இல்லாத காலகட்டத்தில் வார இதழ்களும், நாவல்களும் பேரின்பமாக மக்களால் பார்க்கப்பட்டன. அந்த இரு தளங்களிலுமே கொடி கட்டிப் பறந்தார் பாலகுமாரன். நாவல் உலகில் புகழின் உச்சியில் இருந்த பாலகுமாரனை தேடி சினிமா வாய்ப்புகள் வந்தன. பொதுவாக தமிழ் சினிமா குறித்து எழுத்தாளர்கள் வைக்கும் குற்றச்சாட்டு, 'மலையாள சினிமா அளவுக்கு இவர்கள் இலக்கியவாதிகளை பயன்படுத்திக்கொள்ளவில்லை' என்பதுதான். அப்படி, எழுத்தாளர்களை பெரிதாக அரவணைக்காத தமிழ் சினிமா, சுஜாதாவையும் பாலகுமாரனையும் அழைத்துக் கொண்டாடியது. 'இவர்களைத்தான் நாங்கள் எழுத்தாளர்களாகவே ஏற்றுக்கொள்ளவில்லையே' என்றார்கள் இலக்கியவாதிகள். நாவல்களில் எப்படி இவர் 'மாஸ்' எழுத்தாளராக வணிக ரீதியாக பெரு வெற்றி பெற்றாரோ, அதே போல சினிமாவிலும் இவர் 'மாஸ்' எழுத்தாளர்தான். விருதுகளை அதிகமாகப் பெற்றதில்லை. ஆனால், இவர் எழுதிய வசனங்கள் பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டன. அவரது இன்றைய புகைப்படங்களை, தோற்றத்தைப் பார்க்கும் இளைஞர்கள் இந்த வசனங்களையெல்லாம் எழுதியது இவரா என்று வியப்பார்கள்.

"நீங்க நல்லவரா கெட்டவரா?"

"தெரியலைப்பா"

"அவனை நிறுத்த சொல்...நான் நிறுத்தறேன்"

80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ், மில்லினியம் கிட்ஸ் அதற்கு அடுத்த கிட்ஸ் என எந்தத் தலைமுறையை எடுத்துக் கொண்டாலும், தமிழகத்தில் இந்த வசனம் தெரியாதவர்கள் இருப்பது அரிது. 'நாயகன்' படத்தில் இடம்பெற்ற இந்த வசனத்தை எழுதியவர் பாலகுமாரன். "நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி" - நாயகன் வசனத்திற்குக் குறையாத புகழ் பெற்றது இந்த 'பாட்ஷா' பட வசனம். 'பாட்ஷா' படத்திற்கும் வசனம் பாலகுமாரன்தான். 'குணா', 'ஜென்டில்மேன்', 'காதலன்' என இவர் வசனம் எழுதிய படங்கள் எல்லாம் புகழ் பெற்றவை, அந்தப் படங்களின் வெற்றிக்கோ தோல்விக்கோ இவர் முழு காரணம் இல்லையென்றாலும், வெற்றி பெற விரும்பிய, பிரம்மாண்டமாக படமெடுக்க விரும்பிய மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட பல இயக்குனர்கள் இவரை தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொண்டார்கள்.



இது அடுத்த தலைமுறையிலும் தொடர்ந்தது. அஜித் நடித்த 'முகவரி', 'சிட்டிசன்' படங்களுக்கு இவர்தான் வசனம் எழுதினார். "நான் தனி ஆள் இல்லை", "இது கதையல்ல கருப்பு சரித்திரம்" என்று அஜித் கதறும் காட்சி மறக்க முடியாதது. அந்தப் படம் பலவிதத்திலும் கிண்டல் செய்யப்பட்டாலும் வசனங்கள் குறிப்பிடத்தக்கவையே. அது போல் 'முகவரி' படத்திலும் பாசம், நம்பிக்கையென வசனங்களில் விளையாடினார் பாலகுமாரன். இப்படி, இவரது பாட்ஷா, நாயகன் வெற்றிகளை கவனித்திருந்த சிம்பு, தனுஷ் ஆகியோர் தங்கள் படங்களுக்கும் இவரை வசனம் எழுதக் கேட்டு அந்த வசனங்களும் பேசப்பட்டவையே. சிம்புவின் 'மன்மதன்', 'வல்லவன்' படங்களுக்கு இவர் எழுதிய வசனங்கள், வயதானாலும் இவர் ட்ரெண்டில்தான் இருந்தார் என்பதைக் காட்டின. "பயப்படறியா குமாரு?", உள்பட இன்றும் மீம்ஸ்களிலும் 'ட்ரோல்'களிலும் இடம்பெறும் புதுப்பேட்டை பட வசனங்கள் இவரால் எழுதப்பட்டவையே.

"சினிமா காசைக் கொடுத்து என்னைத் தின்றுவிடும், அதனால அதைக் குறைச்சுகிட்டேன்" என்றார் இவர் சினிமா குறித்து. 'குணா' படத்தில் வரும் புகழ் பெற்ற காட்சியான முதல் காட்சியில், "இது என் மூஞ்சியில்ல, என் அப்பன் மூஞ்சி...இந்த மூஞ்சி எனக்கு வேண்டாம்" என்று கமல் சுத்தி சுத்தி நடந்துகொண்டே பேசும் அந்த வசனம் பெரிய வரவேற்பை பெற்றது. ஒரு முறை அந்த வசனத்தைப் பற்றி பேசும்போது, அது தன் தந்தை குறித்து தான் நினைத்ததை எழுதியது என்று அதிர வைத்தார் பாலகுமாரன். அவர் எழுதிய பாத்திரங்கள் எதுவுமே கற்பனையில்லை என்று கூறிய அவரை இலக்கியவாதிகள் ஏற்காமல் போகலாம், நல்ல சினிமாக்காரர்கள் ஏற்காமல் போகலாம். ஆனால், இரண்டு வடிவத்திலுமே அவர் மக்களுக்கானவர். மக்களால் ரசிக்கப்பட்டவர். அவர் இன்று மறைந்துவிட்டார், அவரது வசனங்கள் அடுத்த தலைமுறையிலும் பேசப்படும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT