Skip to main content

இதிலிருந்து உருவானது தான் சீதக்காதி - இயக்குனர் பாலாஜி தரணீதரன்!

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
seethakathi

 

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீதக்காதி' படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் உருவான விதம் குறித்து இயக்குனர் பாலாஜி தரணீதரன் பேசியபோது...

 

"சில வருடங்களுக்கு முன் ஒரு மேடை  நாடகத்தை பார்த்து விட்டு வந்தபோது  என் மனதில் எழுந்த கேள்விகளிலிருந்து உருவான கதை தான் 'சீதக்காதி'. மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் முன்பு நடிக்கும்போதும் கூட, ஆத்மார்த்தமான நடிப்பை கொடுக்கிறார்கள் மேடை நாடக நடிகர்கள். இருப்பினும், பார்வையாளர்களின் எண்ணிக்கை  விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் மிகவும் சொற்பமே. அதன்பிறகு, சில மணிநேரங்கள் அவர்களுடன் பேசினேன். அவர்களது குழந்தைத்தனமான உணர்ச்சிகள் மற்றும் உற்சாகத்தினால் ஆச்சரியமடைந்தேன். பணத்தை விடவும் பாராட்டு மற்றும் கைதட்டலை மதிக்கிறார்கள். நான் அங்கு இருந்து வந்தபோது, என் மனதில் நிறைய சந்தேகங்களும், கேள்விகளும் கற்பனைகளும் இருந்தன, இது தான் படிப்படியாக சீதக்காதியாக உருவெடுத்தது. இப்போதைக்கு கதையை பற்றிய எந்தவொரு தகவலையும் வெளிப்படுத்த முடியாது.

 

 

 

ஏனெனில் அது ரசிகர்களின் அனுபவத்தை சிதைத்து விடும். படம் முடிந்தவுடன் தலைப்புக்கும், படத்துக்கும் உள்ள சம்பந்தத்தை ரசிகர்கள் உணர்ந்து கொள்வார்கள். சீதக்காதியுடன் எனக்கும், விஜய் சேதுபதியுடனான பயணமும் மிகப்பெரியது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் முடிந்த நேரத்திலேயே இந்த கதை என்னிடம் இருந்தது. விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க முடியுமா? என கேட்டார். அதை நான் கேலி என நினைத்து விட்டேன். பின்னர் 2017ல் திரும்பி அவரையே நடிக்க சொல்லி போய் நின்றேன். அவர் உடனடியாக எந்த தயக்கமும் இல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டார். ஒருவேளை, 'அய்யா' இது அவர் மூலம் நடக்க வேண்டுமென்று காத்திருந்தார் போல. சில நேரங்களில், வாழ்க்கையில், நாம் சில காரியங்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, மாறாக அது தான் நம்மை தேர்ந்தெடுக்கும், இல்லையா?. 

 

சீதக்காதியின் எமோஷன் வெறும் கதை மற்றும் கேமரா லென்ஸோடு சுருங்கியது இல்லை, எனக்கு அதையும் தாண்டிய அனுபவம். நாடக கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிதே எனக்கு கிடைத்த பெரும் பரிசு. சில நேரங்களில் அவர்கள் ஆத்மார்த்தமாக நடிக்கும்போது, பேச மறந்து நின்று விடுவேன். மௌலி சார் ஒரு நம்பமுடியாத நடிப்பை, பெரும்பாலும் சைலன்ஸ் மற்றும் ஒரு சில வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினார். அர்ச்சனா மேடம், மகேந்திரன் சார், ராஜ்குமார் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்