/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/213_15.jpg)
'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலாஜி மோகன் தனுஷை வைத்து 'மாரி' மற்றும் 'மாரி 2' படத்தை இயக்கி பிரபலமானார். இவர், கடந்த ஆண்டு துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகத்தெலுங்கு டிவி நடிகை கல்பிகா கணேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்தார். மேலும் பட ப்ரோமோஷனில் தன்யா பாலகிருஷ்ணாவை கலந்துகொள்ள விடாமல் பாலாஜி மோகன் கட்டுப்படுத்துகிறார் எனக் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பாலாஜி மோகன், தன்மீது நடிகை கல்பிகா கணேஷ் அவதூறு பரப்புவதாகக் குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ள எனக்கும், 7 ஆம் அறிவு, ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணாவுக்கும் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி திருமணம் நடந்தது. இணையத் தொடர்களில் நடித்து வரும் தெலுங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் எங்களின் திருமணம் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும். இதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பின் வாதத்தைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்த நடிகை கல்பிகா கணேஷுக்கு தடை விதித்து இது தொடர்பாக அவர் பதிலளிக்க வேண்டி உத்தரவிட்டார். இயக்குநர் பாலாஜி மோகன், ஏற்கனவே அருணா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இவர் நடிகை தன்யாவை இரண்டாவதாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாகத்தகவல் உலா வந்த நிலையில் இந்த வழக்கின் மூலம் அந்த தகவல் உறுதியானது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கானது நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை கல்பிகா தரப்பு வழக்கறிஞர், சமூக வலைத்தளங்களில் இருந்து அவதூறான வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும், வீடியோ மூலம் தம்பதியரிடம் மன்னிப்பு கேட்டு தனது முகநூல் பக்கத்தில் புது வீடியோ பதிவிட்டதாகவும் கூறினார். ஆனால், மன்னிப்பு கேட்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கக் கூடாது என்றும், அந்த சமூக வலைத்தள பக்கத்தை கல்பிகா முடக்கக் கூடாது என்றும் பாலாஜி மோகன் தரப்பு வழக்கறிஞர் கோரினார். பின்பு தன் மீது குற்றம் சாடியவர் மன்னிப்பு கோரியதால் தனது மனுவை வாபஸ் பெற்றார் பாலாஜி மோகன். இதைப் பதிவு செய்த நீதிபதி மனுவைத்தள்ளுபடி செய்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)