Skip to main content

'காதல் கொஞ்சம் தூக்கலா' - மீண்டும் இணையும் நட்சத்திரம் நகர்கிறது ஜோடி

Published on 17/09/2022 | Edited on 17/09/2022

 

balaji mohan next movie starring kalidas jayaram dushara vijayan

 


'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலாஜி மோகன் தனுஷை வைத்து 'மாரி' மற்றும் 'மாரி 2' படத்தை இயக்கி பிரபலமானார். இயக்கம் மட்டுமின்றி 'ஓபன் விண்டோ' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'மண்டேலா' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

இந்நிலையில் பாலாஜி மோகன் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி 'காதல் கொஞ்சம் தூக்கலா' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அமலா பால் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கன்னட நடிகை ஷர்மிலா மாண்ட்ரே தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 30 நாள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படம் சாரதா சுப்ரமணியன் எழுதிய 'மேக் இட் 2' நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு காதல் காமெடி கதையாக உருவாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.   

 

இதனிடையே பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஜோடியாக நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவர்களின் ஈகோ சண்டை ரசிக்க வைத்ததா? - ‘போர்’ விமர்சனம்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Por movie Review

இயக்குனர் மணிரத்னம் உதவியாளர் பிஜாய் நம்பியார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கியுள்ள திரைப்படம் போர். கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்தது?

சிறுவயதில் பள்ளியில் நண்பர்களாக இருக்கும் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஆகியோர் பின்னாளில் எதிரிகளாக மாறுகிறார்கள். கல்லூரியில் சீனியர் மாணவராக இருக்கிறார் அர்ஜுன் தாஸ். அதே கல்லூரியில் ஜூனியர் மாணவராக வந்து சேரும் காளிதாஸ் அர்ஜுன் தாஸை பழி வாங்க துடிக்கிறார். இதனால் சீனியர் கேங்குக்கும் ஜூனியர் கேங்குக்கும் முட்டல் ஏற்படுகிறது. இந்த சண்டை போக போக, ஈகோ மோதலாக மாறி இதற்கு இடையே வரும் காதல், நட்பு, துரோகம் என பிரச்சனை பெரிதாகி கடைசியில் ஒரு போராக மாறுகிறது. இந்தப் போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே இப்படத்தின் மீதி கதை.

கல்லூரியில் இருக்கும் மாணவர்களின் நட்பு, காதல், துரோகம், சண்டை என அனைத்து விதமான உணர்ச்சிகளை வைத்து படம் உருவாக்கி இருக்கும் பிஜாய் நம்பியார் அதை தன் சிறப்பான மேக்கிங் மூலம் உலகத்தரம் வாய்ந்த படமாக கொடுத்திருக்கிறார். படத்தின் மேக்கிங்கில் அதிக கவனம் செலுத்தி இருக்கும் அவர் ஏனோ திரைக்கதையில் சற்றே கோட்டை விட்டு இருக்கிறார். முழு படத்தையும் ஈகோ சண்டையை வைத்து நகர்த்தி இருக்கும் இயக்குநர் அதை இன்னும் கூட ரசிக்கும் படி கொடுத்திருக்கலாம். ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் அவர் திரைக்கதையிலும் அதே மெனக்கடலை கொடுத்து படத்தை உருவாக்கி இருந்தால், இன்னமும் கூட சிறப்பாக அமைந்திருக்கும். கூடவே கல்லூரியில் மாணவர்கள் படிக்கும்படியான காட்சிகளை காட்டிலும் போதைப்பொருள் பயன்பாடு, சண்டை, வன்முறை போன்ற காட்சிகள் படத்தில் அதிகம் வருவதும் சற்றே அயர்ச்சியை கொடுத்திருக்கிறது. மற்றபடி படத்தில் நடித்த நடிகர்களின் பங்களிப்பு படத்தின் மேக்கிங் ஆகியவை மிகச் சிறப்பாக அமைந்து படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

சீனியர் மாணவராக வரும் அர்ஜுன் தாஸ் படம் முழுவதும் மாஸ் காட்டி இருக்கிறார். அவருக்கு என தனி கூட்டம் அமைத்து அதற்கு நடுவே ராஜா போல் வலம் வருகிறார். மாணவராக இவர் நடிக்கும் நடிப்பை விட, லீடராக நடித்திருக்கும் நடிப்பு நன்றாக இருக்கிறது. பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். சின்ன சின்ன முக பாவனைகள் கூட எரிச்சல் ஊட்டும் படி கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார். நாயகிகள் சஞ்சனா நடராஜன் டி ஜே பானு ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். சீனியர் மாணவியாக வரும் சஞ்சனா நடராஜன் கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கிறார். முன்னாள் மாணவியாக வரும் டி ஜே பானு அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்து இருக்கிறார். மற்றபடி உடன் நடித்த மற்ற மாணவ மாணவியர் மற்றும் நடிகர்கள் ஆகியோர் அனைவரும் நிறைவான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.

ஜிம்சி காலித், பிரிஸ்லி ஆஸ்கர் டிஸோசா ஆகியோரது ஒளிப்பதிவில் படம் உலகத்தரம். கல்லூரி சம்பந்தப்பட்ட ஃபெஸ்டிவல் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேரக் காட்சிகள் தரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சச்சிதானந்த சங்கரநாராயணன், ஹரிஷ் வெங்கட், கௌரவ் காட்கிண்டி ஆகியோரது இசையில் பாடல்கள் சுமார் பின்னணி இசை ஓகே. படத்தின் இறுதியில் வரும் இளையராஜா பாடல் சிறப்பாக அமைந்திருக்கிறது.

படம் முழுவதும் வெறும் ஈகோ பிரச்சனையை மையமாக வைத்து அதனுள் காதல், நட்பு, சோகம், வெறுப்பு, சண்டை என பல்வேறு உணர்ச்சிகளை கலந்து கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் அதை இன்னமும் கூட சிறப்பாக கொடுத்து இருக்கலாம்.

போர் - சற்றே போர்

Next Story

“இலக்கை அடைந்த தருணம்...” - துஷாரா விஜயன் பெருமிதம்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
dhushara vijayan about raayan movie and dhanush

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இப்படத்தில் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் இப்படம் தனுஷின் கனவுப் படம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளதாகப் படக்குழு அவர்களது கதாபாத்திர லுக் போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டு உறுதி செய்தது. இதையடுத்து பிரகாஷ் ராஜ் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், துஷாரா விஜயன் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக துஷாரா விஜயன், “இந்த படம் எனக்கு ஒரு கிஃப்ட். கனவு நனவான தருணம் என்று சொல்வதை விட இலக்கை அடைந்த தருணமாகத்தான் நான் பார்க்கிறேன். தனுஷ் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் இயக்கத்தில் நடித்ததை தாண்டி அவருடன் நடிப்பதை கூடுதல் மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.