Skip to main content

"இயக்குநர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது"- விலங்கு வெப்சீரிஸ் 'கருப்பு' பேட்டி 

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

Bala Saravanan

 

பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல், இனியா, முனீஷ்காந்த், பாலா சரவணன், ஆர்.என்.ஆர் மனோகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான விலங்கு வெப் சீரிஸ், கடந்த 18ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. மொத்தம் 7 தொடர்களைக் கொண்ட இந்த வெப்சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தத் தொடரில் கருப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பாலா சரவணனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் விலங்கு வெப்சீரிஸ் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...   

 

"விலங்கு வெப் சீரிஸின் இயக்குநர் பிரசாந்த் என்னுடைய நெருங்கிய நண்பன். அவன் இயக்கிய புரூஸ் லீ படத்திற்காக கதை சொல்ல வந்தபோதுதான் முதன்முதலில் சந்தித்தோம். ஆனால், கொஞ்ச நாட்களிலேயே நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். அவனுடன் பேசும்போது, நகைச்சுவை கதாபாத்திரங்களைத் தாண்டி மற்ற கதாபாத்திரங்களும் பண்ண எனக்கு ஆசையாக இருக்கிறது என்று அடிக்கடி கூறுவேன். அவனும், கண்டிப்பாக பண்ணனும்டா என்று சொல்லிக்கொண்டே இருப்பான். 

 

விலங்கு வெப் சீரிஸுக்கான கதை உருவான உடனேயே என்னிடம் வந்து கதை சொன்னான். கதை ரொம்பவும் பிரமாதமாக இருந்தது. எனக்கு கருப்பு கதாபாத்திரம் பிடித்திருந்தாலும்கூட அதை எப்படி கேட்பது என்று நினைத்து கேட்கவில்லை. முதலில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் இருந்தது. ஆனால், அதை நீக்கிவிட்டனர். அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று சொன்னதும் டேய் நீ கருப்பு கேரக்டர் பண்ணுடா என்றான். அதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. தேர்ந்த அனுபவம் உள்ள ஒருவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நான் நடித்தால் சரியாக இருக்குமா என்று யோசித்தபோது, நீ நம்பி பண்ணுடா... உனக்கு சரியாக இருக்கும் என்று கூறி நம்பிக்கை கொடுத்தான். அப்படித்தான் இந்த வெப் சீரிஸுக்குள் நான் வந்தேன். வெப் சீரிஸுக்கு நல்ல வரவேற்பு இருக்கும், நம்முடைய கதாபாத்திரமும் கவனிக்கப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால், இவ்வளவு பெரிய வரவேற்பு என்பது நாங்களே எதிர்பார்க்காதது". இவ்வாறு பாலா சரவணன் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்