bala praised sivakarthikeyan kottukkaali team

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் கொட்டுக்காளி. இப்படத்தைக் கூழாங்கல் பட இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்க சூரியோடு இணைந்து மலையாள நடிகை அன்னா பென் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு படத்தைப் பாராட்டிப் பேசியிருந்தனர். படத்தின் ட்ரைலரும் பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது.

மேலும் பெர்லின் உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் கலந்து கொண்டதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் கமல்ஹாசன் பாராட்டு அமைந்தது. இந்த நிலையில் பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தார் சூரி.

இந்த நிலையில் இயக்குநர் பாலா இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வாழ்த்து செய்தியை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவர்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வாழ்த்துக் குறிப்பில், “நம்முடைய தமிழ் திரைப்படத்துறையில் இருந்து உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கான முக்கியமான சான்றுகளில் ஒன்று இந்தக் கொட்டுக்காளி. ஆழமான இக்கதையை எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் வினோத்ராஜ்.

Advertisment

bala praised sivakarthikeyan kottukkaali team

குறிப்பாக, சூரி தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து, ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு சேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில், மிக அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகி அன்னா பென். படத்தில் நடித்திருக்கும் அனைவருமே தாங்களும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரம்தான் என்று சவால்விட்டிருக்கிறார்கள். காட்சியை வழி நடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல், மிகவும் போற்றுதலுக்குரியவர். சிவகார்த்திகேயனுக்கு வினோத்ராஜ் சார்பாக எனது நன்றிகள். சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள் கொட்டுக்காளி படக்குழுவினர் அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.