பிரபல தெலுங்கு பட சினிமா தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனான ராணா டகுபதி கடந்த 2010ஆம் ஆண்டு 'லீடர்' என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த நிலையில், 'பாகுபலி' படத்தில் வில்லனாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் ராணாவின் தாத்தா பிரபல தயாரிப்பாளர் ராமாநாயுடு, சித்தப்பா நடிகர் வெங்கடேஷ் டகுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் 'காடன்' என்ற படத்தில் நடித்துள்ளார் ராணா. இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. கரோனா வைரஸ் பரவலால் படம் எப்போது ரிலீஸாகும் என்பதை அறிவிக்காமல் ஒத்திவைத்துள்ளது படக்குழு.
இந்நிலையில் ராணா நேற்று தனது சமூக வலைத்தளத்தில் திருமணத்திற்குத் தனது தோழி சம்மதம் தெரிவித்து விட்டதாக அறிவித்துள்ளார்.
ஹைதராபாதைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ்தான் ராணாவின் காதலி. அவர் இன்டீரியர் டிஸைனராக உள்ளார். சொந்தமாக ட்யூ ட்ராப் டிஸைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (event management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார். பகுதி நேர மாடலாகவும் சில விளம்பரங்களில், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.