Skip to main content

என்னை அந்த கேரக்டருக்கு எப்படி இயக்குநர் தேர்வு செய்தாரோ? - பகவதி பெருமாள் ஆச்சரியம்

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

 Bagavathi Perumal Interview

 

பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள். தற்போது அவர் செங்களம் வெப்சீரிஸில் நடித்து முடித்துள்ளார். அந்த வெப்சீரிஸில் நடித்த அனுபவங்களோடு பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் 

 

செங்களம் வெப்சீரிசில் ஒரு எம்.எல்.ஏவின் உதவியாளராக நடித்துள்ளேன். மிகவும் சுவாரசியமான ஒரு பாத்திரம். ரசிகர்கள் நிச்சயம் ரசிக்கும்படி இருக்கும். சூப்பர் டீலக்ஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்க வேண்டும் என்று குமாரராஜா சார் எடுத்த முடிவு என்னை இன்றும் பிரமிக்க வைக்கிறது. நான் எதிர்பார்த்த மாதிரியான ஒரு வேடம் அது. குமாரராஜா சாருடைய படத்தில் வேலை செய்ய வேண்டும் என்றும் விரும்பினேன். இரண்டும் அதில் நடந்தது. வித்தியாசமான பாத்திரங்களை என்னால் நன்றாகச் செய்ய முடியும் என்று இயக்குநர்கள் நம்புகிறார்கள். 

 

அரசியல் பற்றிய புரிதல் இருப்பவர்களுக்கு செங்களம் வெப்சீரிஸ் ஒரு விருந்தாக இருக்கும். அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்குப் புரிதலை இது ஏற்படுத்தும். இயக்குநரின் எழுத்து அவ்வளவு ஆழமாக இருக்கும். அஜித் சார் ஒரே நாளில் 2000 ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது என் வாழ்வில் மறக்க முடியாதது. சினிமாவோ, வெப்சீரிசோ, பெரிய திரையில் பார்ப்பது எப்போதுமே அற்புதமான அனுபவம் தான். ஆனால் நான்கு மணி நேரத்துக்கு மேல் ஓடும் வெப்தொடரை ஓடிடியில் வெளியிடுவது தான் சரி. அதேபோல் தியேட்டரில் மார்க்கெட் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. ஓடிடியில் பலவற்றை சாதிக்க முடிகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் நடிகர்கள் இறக்கிறார்கள்” - ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
uzaippaalar dhinam movie director speech in his movie audio launch

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உழைப்பாளர்கள் தினம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். சந்தோஷ் நம்பிராஜன் பேசுகையில், “இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ராஜேந்திரன், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். 

லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார். தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையையும் எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார்.  இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். 

இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். 500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசுப் பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். 

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...