நாய் கடி விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடு முழுவதும் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கட்டுக்குள் கொண்டு வர தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைத்து வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வரும் சூழலில் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு நாய் பிரியர்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியது. இந்த தலைப்பை மைய்யமாகக் கொண்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீதிமன்ற தீர்ப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கலந்து கொண்டு பேசியிருந்தனர். 

Advertisment

அந்த வகையில் நடிகர் படவா கோபி, நடிகை அம்மு உள்ளிட்டவர்கள் நாய்களுக்கு ஆதரவாக பேசியிருந்தனர். இவர்கள் கூறிய கருத்து கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. மேலும் மீம்ஸ் மற்றும் ட்ரோல் மெட்டிரியலாக சமூக வலைதளங்களில் உலா வந்தது. இதனையடுத்து படவா கோபி மற்றும் அம்மு ஆகியோர் ட்ரோல்கள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். படவா கோபி கூறுகையில், “நான் மூன்று விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தேன். நாயின் குணம், நம்மளுடைய நடவடிக்கை, பிரச்சனைக்கான தீர்வு... இதில் இரண்டு விஷயங்களை அவர்கள் போடவில்லை. அதனால் யாரும் தயவு செய்து என்னை தவறாக நினைக்காதீங்க. அப்படி யாருக்காவது நான் பேசியது காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னிச்சிடுங்க. மனிதர்கள் மீதான அன்பிலும், நாய்கள் மீதான அன்பிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில்தான் நிகழ்ச்சிக்கு போனேன். போனது வேறு நடந்தது வேறு. எடிட் செய்யாத வெர்ஷனை அவர்கள் ரிலீஸ் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். 

நடிகை அம்மு வெளியிட்ட வீடியோவில், “அந்த நிகழ்ச்சியில் நான் பேசியதை வைத்து நிறைய ட்ரோல் பன்றீங்க. அதுல நிறைய ஆபாசமான வார்த்தையையும் பயன்படுத்துறீங்க. அதுக்கெல்லாம் பயந்து இந்த வீடியோவ போடுறேன்னு நினைச்சுக்காதீங்க. 8 மணி நேரம் அந்த நிகழ்ச்சி நடந்தது. 45 நிமிஷத்துக்கு எடிட் பண்ணிருகாங்க. நீங்க எல்லாருமே பார்த்தது எடிட் பண்ண வெர்ஷன். எங்க தரப்பில் எதுவுமே தெரியாதவங்களையும் அந்த தரப்பில் பாதிக்கப்பட்டவங்களை தேடி தேடியும் பிடித்து பங்கேற்க வச்சிருக்காங்க. டிஆர்பி-க்காக எதுக்காக இந்த அசிங்கமான வேலையை பார்த்திருக்கீங்க” என்றார்.