Skip to main content

”என் பையனுக்கு அது மட்டும் நடக்கலனா, இன்னைக்கு நான்...” - எட்டு வருட மன உளைச்சலை விளக்கும் பப்லூ ப்ரித்திவிராஜ்

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

Babloo Prithiveeraj

 

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துப் பிரபலமான நடிகர் பப்லூ ப்ரித்திவிராஜை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

”என்னை நடிகராக்க வேண்டும் என்று என் அப்பா முடிவெடுத்துவிட்டதால் சின்ன வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அப்போது எனக்கு நடிப்பெல்லாம் தெரியாது. ஷூட்டிங் போனால் ஹோம் ஒர்க் எழுத வேண்டாம், ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துத்தான் நடிக்க ஆரம்பித்தேன். குழந்தை நட்சத்திரமாகவே 30 படங்களுக்கு மேலாக நடித்துவிட்டேன். நாளை நமதே படம் ரிலீஸானதற்குப் பிறகு நீதான சின்ன எம்.ஜி.ஆர் என்று எல்லோருமே கேட்க ஆரம்பித்தார்கள். நான் எம்.ஜி.ஆரை செட்டில் பார்த்திருக்கிறேன். ஆள் கம்பீரமாக இருப்பார். அவரோடு என்னை ஒப்பிட்டது ரொம்பவும் பிடித்திருந்தது. அதன் பிறகுதான், அப்பா சொன்னதுபோல நடிகராலாம் என்று முடிவெடுத்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். 

 

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 250 படங்களுக்கு மேலாக நடித்துவிட்டேன். நிறைய சீரியல்ஸிலும் நடித்திருக்கிறேன். ஷோ ஆங்கரிங்கூட பண்ணியிருக்கேன். சினிமாவில் எவ்வளவு பிஸியான நடிகராக இருந்தாலும், ஒருகட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். யாரிடமிருந்தும் போன் வராது. ரோட்டில் பார்ப்பவர்கள் என்ன சார் அவ்வளவுதானா, படமெல்லாம் இல்லையா என்று கேட்பார்கள். அஜித்துடன் நடிச்சீங்க அவர் எங்கயோ போய்ட்டார், நீங்க ஒன்னுமே இல்லாம இருக்கீங்க என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். இது எல்லாருக்குமே நடக்கக்கூடியதுதான். எனக்கு இதுதான் தெரியும், நான் இப்படித்தான் நடிப்பேன் என்று நினைக்க ஆரம்பித்தால் மட்டுமே சினிமா நமக்கு போரடிக்க ஆரம்பிக்கும். தினமும் ஏதாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் வாய்ப்பு இல்லாத போதும் ஜாலியாகத்தான் இருக்கும். 

 

ஒருகட்டத்தில் தெலுங்கில் ரொம்பவும் பிஸியான நடிகராக இருந்தேன். நந்தி விருதுகூட வாங்கினேன். என் பையனுக்கு இரண்டரை வயது இருக்கும்போது ஆட்டிசம் குறைபாடு இருப்பது தெரியவந்தது. அதுவரை வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று நினைத்து ஓடிக்கொண்டிருந்த நான், சாதிச்சு என்ன செய்ய, ஜெயித்து என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். உங்க அப்பா நிறைய பணம் சம்பாதிச்சிருக்கேன், நந்தி அவார்டெல்லாம் வாங்கியிருக்கேன் என்று சொன்னால் அவனுக்கு புரியுமா? அடுத்த எட்டு வருடங்கள் கடும் மன உளைச்சலில் இருந்தேன். அதிலிருந்து மீண்டுவருவது ரொம்பவும் சவாலாக இருந்தது. தெலுங்கில் உச்சத்தில் இருந்தபோது சினிமாவே வேண்டாம் என்று சென்னை வந்துவிட்டேன். அதெல்லாம் நடக்காமல் இருந்திருந்தால் தெலுங்கில் இன்றைக்கு பெரிய நடிகராக இருந்திருப்பேன். தற்போது சில படங்களில் மட்டும் நடித்துக்கொண்டிருக்கிறேன்”.  

 

 

சார்ந்த செய்திகள்