பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் அக்னி தேவி. இந்த திரைப்படத்தின் இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் சாம் சூர்யா ஆகியோருக்கும் நடிகர் பாபி சிம்ஹாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இயக்குனர் ஜான் பால்ராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக, நடிகர் பாபி சிம்ஹா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதுள்ளார். வழக்கு நடைபெறும் நிலையில் படம் வெளியானதால் அதிர்ப்தியடைந்த பாபி சிம்ஹா, இது குறித்து சர்ச்சைக்குறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

“அக்னி தேவ் என்ற படத்தின் மேல் வழக்கு நடக்கிறது. இருந்தும் அக்னி தேவி என்ற பெயர் மாற்றி சென்சார் வாங்கி படத்தை வெளியிட்டுள்ளனர். இதைக் கேள்விப்பட்டு டி.சி அலுவலகத்தில் படத்தின் இயக்குனரின் மேல் எஃப்.ஐ.ஆர் வாங்கியாச்சு, ஏற்கனவே கோர்ட்டில் படத்தின் மீது தற்காலிக தடை உத்தரவும் வாங்கிவிட்டோம். அப்படி இருந்தும் இந்த படம் வெளியாகியிருக்கு. எல்லோருக்கும் இதில் உள்ள பிரச்சனைத் தெரியும்.
எனது ஒப்பந்தத்தின் படி படத்தின் பெயர் அக்னி தேவ், ஜான் பால்ராஜ் தான் இயக்குனர், ஜூன் முதல் செப்டம்பர் வரை எதாவது 25 நாட்கள் என்னுடைய கால் சீட். ஆனால், நான் இதில் ஐந்து நாட்கள் மட்டும்தான் நடித்தேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஐந்து நாளில் நான் நடித்ததை வைத்து எப்படி படத்தை முடிச்சாங்கனு எனக்கு தெரியல. கோர்ட்டில் நான் சொல்லியிருக்கேன், படத்தில் வருவது என்னுடைய குரல் இல்லை, வேறுயாரோ டப்பிங் பண்ணியிருக்காங்க. எனக்கு பதில் வேறோருவரை டூப்பாக பயன்படுத்தி, முகத்தில் கிராஃபிக்ஸ் செய்து படத்தை முடித்துள்ளனர். இது நியாயமா?
நான் கோர்ட்டில் முறையிட்டபோது உங்களுக்கான நியாயம் கிடைக்கும் என்று படத்துக்கு தற்காலிக தடை கொடுத்திருக்காங்க. அப்படியிருந்தும் படம் எப்படி வெளியானது? இங்கு நியாயத்திற்கு என்ன மதிப்பு? இதற்குப் பின் என்ன அரசியல் இருக்கு? தயாரிப்பாளர் சங்கம் ஏன் இவ்வளவு முனைப்பாக இந்தப் படத்தை வெளியிட்டாங்க? இதற்குப் பின் யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது? என்பது எதுவும் தெரியவில்லை. எனகே ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
என்கிட்ட படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு, டூப் போட்டு க்ராபிக்ஸ் செய்து படத்தை எடுத்திருக்கிறார்கள். அது என் குரலே இல்லை. அதற்கான எல்லா ஆதாரங்களையும் கோர்ட்டில் காட்டினேன். அது நிருபிக்கப்பட்டுவிட்டது.
இது எல்லாம் தெரிந்தும் ஏன் இந்த படத்திற்கு ஆதரவு கொடுத்து வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. என்ன பழிவாங்குற நோக்கத்தில் பண்றாங்களானு புரியல. நிறைய நல்ல படம் இருக்கு சார், அதையெல்லாம் ரிலீஸ் பண்ண முடியாமல் கஷ்டபடுறாங்க. அவங்களுக்கு ஆதரவு கொடுத்து படத்தை வெளியிட உதவுங்க. அதைவிட்டுட்டு ஃபிராடு பண்ணியிருக்க படத்துக்கு சப்போர்ட் பண்ணியிருக்கீங்க. இது நம்ப தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கும். வேறெந்த மாநிலத்திலும் இவ்வளவு பலவீனமான அமைப்பு இருக்குமானு தெரியல”. என்று கூறியுள்ளார். இது சினிமா வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.