
கரோனா லாக்டவுன் சமயத்தில் சினிமா துறை மிக மோசமான நிலையில் இருக்கிறது. மார்ச் மாத தொடக்கத்தில் ஏவிஎம் ராஜேஸ்வரி என்னும் பாமர மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு இடமாக இருந்த திரையரங்கம் மூடப்பட்டது. தற்போது அகஸ்தியா என்னும் திரையரங்கமும் பெரும் நஷ்டத்தால் மூடப்பட்டுவிட்டது.
ஒரு காலத்தில் சென்னையில் சினிமா ஷூட்டிங் என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது வடபழனியிலுள்ள ஏவிஎம் ஸ்டூடியோதான். தற்போது இந்த ஸ்டூடியோவில் ஒரு பகுதி குடியிருப்பாகவும் மற்றொரு பகுதி மருத்துவமனையாகவும் மாறிவிட்டது. இந்நிலையில் பல படங்களின் டப்பிங் பணிகளுக்காக உதவிய ஏவிஎம் கார்டன் பகுதி முற்றிலுமாக இடிக்கப்பட்டு, திருமண மண்டபமாக மாற்ற ஏவிஎம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த ஏவிஎம் கார்டனில் பல படங்கள் ஷூட் செய்யப்பட்டுள்ளது. அங்கே டப்பிங் தியேட்டரும் உண்டு. தற்போது சினிமாவில் பலரும் சென்னைக்கு வெளியே உள்ள ஸ்டூடியோக்களையும், ஹைதரபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியையும் நாடுகின்றனர். இதனால் சிட்டிக்குள் இருக்கும் ஏவிஎம் ஸ்டூடியோவின் பயன்பாடு குறைந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கார்டனில் கடைசியாக யோகிபாபுவின் மண்டேலா படம் ஷுட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.