/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/16_50.jpg)
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் 'அவதார்'. இப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்தது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் 3டியில் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரமாண்டமாகத் திரையரங்கில் வெளியாகவுள்ளது. முன்னதாக 'அவதார்' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் 2024,2026,2028 ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், அடுத்தடுத்த பாகங்கள் குறித்து யோசிக்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் இந்தப் படத்தை எழுதிய காலகட்டத்துக்கும் இப்போது இருக்கும் காலகட்டத்துக்கும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெருந்தொற்று, ஸ்ட்ரீமிங் தளங்கள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. அதனால் இப்படம் அனைவரையும் திரை அரங்கிற்கு அழைத்து வரச் செய்யும் என நினைக்கிறேன். ஆனால் எத்தனை பேர் இந்த மாற்றத்திற்குத்தயாராக இருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. மேலும் திரைத்துறையில் இப்போது சந்தை நிலவரமும் அப்படித்தான் உள்ளது.
அதன் காரணமாக அவதார் படத்தை மூன்றாம் பாகத்தோடு முடித்துக் கொள்ளும் எண்ணம் இருக்கிறது. இரண்டாம் பாகத்தின் வசூலைப் பொறுத்தே இந்த முடிவு எடுக்கப்படும். அந்தப் படத்தை இயக்கும் பொறுப்பைக்கூட நம்பிக்கைக்குரிய இயக்குநரிடம் கொடுக்கும் எண்ணமும் உள்ளது. நான் வேறொரு கதையை உருவாக்கி வருகிறேன். என்ன நடக்கும் என்பது என் கையில் இல்லை" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)