ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியாகி, உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அவதார்’. 3டி-யில் வெளியான இப்படம் 2.923 பில்லியன் டாலர்கள் வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையை அப்போது பெற்றது.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற தலைப்பில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வருகிறார். ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ என்ற தலைப்பில் உருவாகும் மூன்றாம் பாகம் இந்தாண்டு டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் மூன்றாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் அப்டேட் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ‘வராங்’(Varang) என்ற கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. இந்த கதாபாத்திரத்தை புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பேத்தி, ஊனா சாப்ளின் ஏற்று நடித்துள்ளார். போஸ்டர் படத்தின் தலைப்பிற்கேற்ப நெருப்பும் ஆஷும் கலந்த வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லர், வருகின்ற 25ஆம் தேதி வெளியாகவுள்ள ‘தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்; ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் ’ படத்துடன் பிரத்யேகமாக திரையிடப்படவுள்ளது.