ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி அவரும் முன்னணி இயக்குநராக உருவானார். இதை தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானைவைத்து ஜவான் படம் இயக்கியிருந்தார். கடந்த மாதம் 7ஆம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் 1143.59 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் தனது மனைவி பிரியா அட்லீயுடன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள இராஜகோபால சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு அவரது குலதெய்வ கோயிலான மன்னார்குடி அருகே வேளுக்குடி கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.