இயக்குநர் அட்லீ, ஜவான் படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறார். இதனிடையே ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் தற்போது இந்தியில் வருண் தவானின் 18வது படத்தை தயாரித்து வருகிறார். இதன் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அட்லீ நிறுவனத்துடன் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் தயாரிக்கிறார்கள்.
காளீஸ் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நடிக்கின்றனர். மேலும் ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.தமன் இசையமைக்கும் இப்படம் ஆக்சன் ஜானரில் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது. மேலும் படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மே 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக்காக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. பேபி ஜான் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து ஒரு வீடியோவும் வெளியாகியுள்ளது. மேலும் புது போஸ்ட்ரையும் அட்லீ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.