ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் நேற்று(31.10.2024) தீபாவளியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் அட்லீ, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் எக்ஸ் பக்கம் வாயிலாக பாராட்டு பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் ஓ மை கடவுளே பட இயக்குநரும் சிம்புவின் புதிய படத்தை இயக்கவுள்ள அஷ்வத் மாரிமுத்து அமரன் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “எனது பெற்றோர் என்னை ராணுவத்தில் சேர்க்க ஆசைப்பட்டனர். 8 ஆம் வகுப்பில் நான் சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன், இருந்தாலும் அங்கு செல்ல பயந்தேன். இன்று 'அமரன்' படத்தை பார்த்த பிறகு நான் தவறான முடிவை எடுத்து விட்டன் என்பதை உணர்ந்தேன். நான் அந்த பள்ளிக்கு சென்றிருக்க வேண்டும். மேஜர் முகுந்தின் வாழ்க்கை முழுக்க முழுக்க வீரம் நிறைந்தது. சிவகார்த்திகேயன் அதனை முழுமையாக்கியுள்ளார். சாய் பல்லவி நம்மில் ஒருவராக இருந்தார். அவர் அழுத காட்சிகளில் எல்லாம் நானும் அழுதேன். எல்லா துறையிலும் சிறப்பாக செயல்பட்ட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை கொண்டாட வேண்டும். இது எளிதான விஷயமல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.