ashok selvan speech at Producer Dilli Babu Remembrance Meet

தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி. ’உறுமீன்’, ‘மரகதநாணயம்’, ‘ராட்சசன்’, ‘பேச்சிலர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் நிறுவனர் ஜி. தில்லி பாபு கடந்த செப்டம்பர் 9 அன்று காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. இதையொட்டி சென்னையில் மறைந்த தில்லி பாபுவின் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் அவரது குடும்த்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.கே செல்வமணி, "தில்லி பாபுவை எனக்கு கடந்த ஏழு எட்டு வருடங்களாக தெரியும். என் வீட்டில் தான் அவரது அலுவலகம் உள்ளது. என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர். எப்போதும் சிரித்த முகத்தோடும் குழந்தைத் தனமாகவும் இருப்பார். என்னுடைய வீட்டில் ஏழெட்டு வருடங்களாக அவரது அலுவலகம் இயங்கி வருகிறது. வெயில், மழை, கொரோனா என எது வந்தாலும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் வாடகை போட்டு விடுவார். எனக்கு மட்டுமல்ல, எல்லோரிடமும் இன்முகத்தோடு இருப்பார். அவரது நல்ல குணங்களை நாம் பின்பற்றுவதே அவருக்கு நாம் செலுத்தும் நினைவஞ்சலி. வெற்றிப் படம், தோல்விப் படம் என்றில்லாமல் எல்லாப் படங்களுக்கும் தயாரிப்பாளராக அவரது பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும். மிகச்சிறந்த மனிதர். அவரது புகழ் நிச்சயம் தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும்” என்றார்.

Advertisment

நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, "தில்லி பாபு சார் என் கரியருக்கு புத்துயிர் கொடுத்தார். அவர் என்னையும் என் சகோதரியையும் மிகவும் அக்கறையுடன் வழிநடத்தினார். ‘ஓ மை கடவுளே’ படம் வெளியாவதற்கு முன்பு வரை எனக்கு இண்டஸ்ட்ரியில் மார்க்கெட் இருந்ததில்லை. இருந்தாலும் அவர் எனக்காக பணம் கொடுத்தார். அவர் கொடுத்த பாதையில்தான் நான் அதில் பயணிக்கிறேன். அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என உருக்கமாக பேசினார்.