பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் தெலுங்கு ஆந்தாலஜி திரைப்படமான ‘பிட்ட கதலு’ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ‘பிங்கி’ எனும் பகுதியில் இந்து கதாபாத்திரத்தில் நடித்த ‘கொலைகாரன்’பட நடிகை அஷிமா நர்வால் இப்படம் குறித்து பேசும்போது...
"இப்போது கிடைத்து வரும் பாராட்டுக்கள், பலவித காரணங்களால், என் வாழ்வின் சிறப்பு மிக்க தருணமாகியுள்ளது. முதல் காரணம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற உலகளாவிய மிகப்பெரும் புகழ்கொண்ட நிறுவனத்தின் முதல் தென்னிந்திய ஆந்தாலஜி படத்தில் பங்கு கொண்டதாகும். அடுத்தது, தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமைகளான சங்கல்ப் ரெட்டி, நடிகர் சத்யதேவ் காஞ்சர்னா, ஈஷா ரெப்பா, ஶ்ரீனிவாஸ் அவசரலா ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்ததாகும். படத்தின் அனைத்து வேலைகளும் கடந்த வருடமே முடிந்த நிலையிலும் பொதுமுடக்கத்தினால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இறுதியாக தற்போது எங்களது திரைப்படம் உலகின் புகழ்மிகு நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் உலகம் முழுக்க 190 நாடுகளில், மிகப்பெரும் பார்வையாளர்களிடம் படத்தினைக் கொண்டு சென்றுள்ளது. இணையம் வழி, ஆஸ்திரேலியாவில் உள்ள எனது நண்பர்கள், எனது நடிப்பினைக் கண்டுகளித்தது ஒரே நேரத்தில் எனக்கு ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. ‘பிட்ட கதலு’திரைப்படம் மிகப்பெரும் புகழினைப் பெற்று தந்துள்ளது. நிறைய நல்ல கதாபாத்திரங்கள் என்னை தேடி வர ஆரம்பித்துள்ளது. தற்போது சில தெலுங்கு திரைக்கதைகளைப் படித்து வருகிறேன். விரைவில் சில படங்களை ஒப்பந்தம் செய்யவுள்ளேன். திரை வாழ்வில் எப்போதும் தனித்துவமிக்க கதைகள் மற்றும் சவாலான பாத்திரங்கள் செய்யவே ஆசைப்படுகிறேன். இனிவரும் காலங்களிலும் ரசிகர்கள் பாராட்டும் வகையிலான படங்களை, கதாபாத்திரங்களை தொடர்ந்து செய்வேன்" என்றார்.