விஷ்ணு விஷால் ராட்சசனுக்கு பிறகு மீண்டும் அது போன்ற ஒரு மர்டர் மிஸ்டரி திரில்லர் படத்தில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க ராட்சசன் பாணியில் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த ஆர்யன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா, இல்லையா? 

Advertisment


ஒரு மிகப்பெரிய தொலைக்காட்சியில் பெண் நிருபராக வேலை செய்யும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு நீயா நானா போல் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் செல்வராகவன் துப்பாக்கி முனையில் அங்கு இருக்கும் பார்வையாளர்களை பிணை கைதியாக வைத்துக்கொண்டு அடுத்த ஐந்து நாட்களில் ஐந்து பேரை தான் கொலை செய்யப் போவதாக கூறிவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். இறந்து போன ஒருவர் எப்படி அடுத்தடுத்து ஐந்து கொலைகளை செய்ய முடியும் என போலீசார் திணறுகின்றனர். இதை இன்வெஸ்டிகேஷன் செய்ய ஐபிஎஸ் போலீஸ் ஆபீஸர் விஷ்ணு விஷால் களம் இறங்குகிறார். அடுத்தடுத்து இறக்கப்போகும் அந்த ஐந்து நபர்கள் யார்? அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? விஷ்ணு விஷால் இதை துப்பு துலக்கினாரா, இல்லையா? என்பதே ஆர்யன் படத்தின் மீதி கதை.

Advertisment

இறந்து போன ஒருவர் தான் இறந்த பின்பு எப்படி கொலை செய்கிறார் என்ற வித்தியாசமான கதை அமைப்பை கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கும் புதுமுக இயக்குனர் கே பிரவீன் அதை விறுவிறுப்பான முறையில் சிறப்பான திரைக்கதை மூலம் நிறைவாக கொடுத்து பார்ப்பவர்களிடம் கைத்தட்டல் பெற்று இருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் ஜெட் வேகத்தில் சரசரவென நகர்ந்து அடுத்தடுத்து திருப்புமுனைகள் நிறைந்த காட்சி அமைப்புகளோடு சிறப்பான முறையில் படம் நகர்ந்து இறுதிக்கட்டத்தில் யூகிக்க முடியாதபடி கிளைமாக்ஸ் அமைந்து பார்ப்பவர்களுக்கு பரவசத்தை கொடுத்திருக்கிறது. இறந்த ஒரு நபர் எப்படி அடுத்தடுத்து ஐந்து கொலைகள் செய்கிறார். அதை எந்த அளவு இன்டலெக்சுவலாக அரங்கேற்றுகிறார். அதை எப்படி போலீசார் துப்பு துலக்குகிறார்கள் என்பதை வைத்துக்கொண்டு சிறப்பான முறையில் திரைக்கதை அமைத்து பார்ப்பவர்களுக்கு நல்ல மர்டர் மிஸ்டர் தில்லர் படம் பார்த்த உணர்வை இந்த ஆரியன் படம் கொடுத்திருக்கிறது. படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் தென்பட்டாலும் அவை நேர்த்தியான திரை கதையால் மறக்கடிக்கப்பட்டு படத்துடன் நம்மை ஒன்ற வைத்திருக்கிறது.


விஷ்ணு விஷால் வழக்கம்போல் கதை தேர்வில் மிகவும் கவனமாக இருந்தது மட்டுமல்லாமல் தன் உடர்கட்டையும் சிறப்பான முறையில் செதுக்கி போலீஸ் அதிகாரியாகவே மாறி நடிப்பில் அடுத்த பரிமாணத்தை காட்டியிருக்கிறார். அதிகம் எக்ஸ்பிரஷன்ஸ் இல்லாத மனிதராக நடித்திருக்கும் அவர் அதை திறன் பட செய்து கவனம் பெற்று இருக்கிறார். நாயகி ஸ்ரத்தா ஸ்ரீநாத் வழக்கமான நாயகியாக வந்து தடம் பதித்து விட்டு சென்று இருக்கிறார். இன்னொரு நாயகியாக வரும் மானசா சௌத்ரி வழக்கமான நாயகிகள் போல் வந்து சென்று இருக்கிறார். அவருக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. காமெடியனாக வரும் கருணாகரன் இந்த முறை சில காட்சிகளை வந்து செல்கிறார். வில்லனாக வரும் செல்வராகவன் ஆரம்ப கட்டத்திலும் இறுதி கட்டத்திலும் மிரட்டி படம் முழுவதும் வித்தியாசமான வில்லத்தனத்தோடு பயணித்து கவனம் பெற்று இருக்கிறார். தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர். 

Advertisment


ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் ஹாலிவுட் தரம். அதேபோல் ஜிப்ரானின் பின்னணி இசை உலக தரம். பாடல்களில் இன்னும் கூட கவனம் செலுத்தி இருக்கலாம். 

கொலையாளி யார் என முன்பே கூறிவிட்டு வித்தியாசமான கதைக்களம் மூலம் விறுவிறுப்பான திரைகதை அமைத்து பார்ப்பவர்களை சீட்டை விட்டு நகர விடாமல் ஜெட் வேகத்தில் நகரும் படமாக இந்த ஆர்யன் படத்தை கொடுத்திருக்கும் இயக்குனர் பிரவீன் லாஜிக் மீறல்களில் மட்டும் சற்று கவனமாக இருந்திருக்கலாம்.

ஆர்யன் - நேர்த்தியானவன்!