பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, சஞ்சனா நடராஜன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், கடந்த மாதம் 22ஆம் தேதி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி,ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி ஒரு மாதங்களைக் கடந்த நிலையிலும், ‘சார்பட்டா பரம்பரை’ படக்காட்சிகளை மையப்படுத்திய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் இன்னும் வலம்வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக பசுபதி ஏற்று நடித்திருந்த வாத்தியார் கதாபாத்திரமும், பசுபதியும் நடிகர் ஆர்யாவும் சைக்கிளில் பேசிக்கொண்டு செல்லும் காட்சியும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகக் கவனம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், நடிகர் பசுபதியின் ட்விட்டர் பக்கத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிமுகம் செய்துவைத்த நடிகர் ஆர்யா, ‘சார்பட்டா பரம்பரை’ படக் காட்சியின் பாணியில் ட்விட்டர் உலகத்திற்கு பசுபதியை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வாத்தியாரே இதான் ட்விட்டர். பாக்சிங்கவிட ரத்த பூமி. உன்னோட பெயரில் நிறைய பேர் இங்க இருக்காங்கன்னு தெரிஞ்சதும் ஒரிஜினல் நான்தான்டானு உள்ள வந்த பாத்தியா, உன் மனசே மனசுதான். வா வாத்தியாரே, இந்த உலகத்திற்குள் போகலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ஆர்யாவின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.