Skip to main content

"என் துணைவியாரை மீட்டெடுக்கப் போராடிய அத்தனை பேருக்கும் நன்றிகள்" - அருண்ராஜா காமராஜ் உருக்கம்!

Published on 24/05/2021 | Edited on 24/05/2021
grghrwghrw

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கரோனா தொற்றால் காலமானார். இவருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிந்துஜா மரணமடைந்தார். சிந்துஜாவின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மறைந்த தன் மனைவி குறித்து உருக்கமாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறிப்பட்டதைக் கண்ட நொடி முதல், நமைச் சுற்றி பரவிக்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது. எத்தனை உள்ளங்கள் உதவிகள், அன்புள்ள ஆறுதல்கள், பிரார்த்தனைகள், அலைச்சல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மீட்டு விட போராடியும் நச்சு அவள் நாசியினுள் புகுந்து சுவாசத்தை உருக்குலைத்து இயக்கத்தை முடக்கி, இன்று இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் கிடைக்கும் என்று அவளையும் என்னை விட்டுப் பிரித்துவிட்டு சென்றது. நச்சு பாசமறியாது, ஏழ்மையறியாது, அத்யாவசிய அநாவசியங்கள் அறியாது. இவையெலாம் நமக்கான வாழ்க்கைக்கான அளவீடுகளே அன்றி நச்சுகிருமியின் முன் நாம் அனைவரும் சமமே.

 

சக மனிதர்களோடு, மனிதத்தோடு வெறுப்பு, வன்மம், காழ்ப்பு இதை வளர்த்துக் கொள்ள மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு அதையே ஓர் வாழ்வியலாக்கி வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறோமோ என்ற சுயபரிசோதனைகளை மேற்கொண்டோமென்றால் இந்த நச்சு நம் பொது எதிரியாகி இந்த போர்க்களம் தன் தீர்வை நோக்கி நகரலாம். இங்கே அசட்டு தைரியங்களும், அர்த்தமற்ற பயங்களுமே உயிர்வேட்டை ஆடிக்கொண்டு இருக்கிறது. என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னையும் என் துணைவியாரையும் மீட்டு எடுக்கப் போராடிய அத்துனை முன்கள போர்வீரர்களும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன். நன்றிகள். எனை சுற்றி ஒருவர் கூட நச்சின் கோரத்தில் நசுக்கப்படவில்லை என்பதே இழந்த ஒவ்வோர் இழப்புகளின் ஆன்மா சாந்தியடைவதற்கான வழி. மீண்டும் பல கோடி வாழ்நாள் நன்றிகள்" என உருக்கமாக  கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
vishnu vishal new movie with arunraja kamaraj

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஒரு படமும், கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ஒரு படமும் தயாரித்து நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Next Story

“குரலற்ற இயலாமையின் குரலின் தொடக்கம்” - அருண்ராஜா காமராஜ் நெகிழ்ச்சி

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
arunraja kamaraj about label series

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'லேபில்'. இந்தத் தொடரில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ள நிலையில் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ள இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். இவர் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற ஸ்வீட் பிரியாணி குறும்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சீரிஸ் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. இந்த நிலையில் லேபில் சீரிஸ் குறித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து அருண்ராஜா காமராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், “நவம்பர் 10, 2023 முதல் இன்று வரை 8 வாரங்கள். லேபிலின் கருவாக்கம், உருவாக்கம் மற்றும் வெளியீடு இவை அனைத்தும் எங்களின் சிறுசிறு ‘பெருங்கனா’. இப்படைப்பின் கரு நம் அனைவரின் ஏதோ ஒரு குரலற்ற இயலாமையின் குரலின் தொடக்கமாய் துவங்கி, கதை கண்டு, களம் கண்டு, வடிவம் கண்டு, இன்று முதல் அத்தியாயம் இன்னும் சில கேள்விகளுடனேயே நிறைவு பெறுவது நீண்ட நெடிய சுமத்தலுக்குப் பின் பிரசவிக்கும் ஓர் உணர்வு.

பிரசவித்தலுக்கான காலமே எட்டு வாரங்கள். அதை ஒரு நாளும் உணர்விக்கத்தவறவில்லை இக்குழந்தை. ஒவ்வொரு அரை மணியும் ஒரு பெரும் வாரமாய் மாறி எட்டி உதைக்கவும் தவறியதில்லை உங்களின் அன்பு மட்டுமே இக்குழந்தையை வளர்த்து இதில் உழைத்த அனைவருக்கும் சுகமாய் முழுதாய் பிரசவித்துக் கொடுத்திருக்கிறது. உங்கள் அன்பைப் பெற பாடுபட்ட என்னுடன் தோள் சேர்த்து அதை கோபுரம் ஆக்க, என் அன்புக்காக மட்டுமே அயராது சுழன்ற ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும்... ஒவ்வொருவரும் என்றுமே எனக்கான பொக்கிஷங்கள். உங்களால் மட்டுமே ‘லேபில்’ சாத்தியம் ஆகியுள்ளது.

பல்வேறு சிந்தனைகள், பல்வேறு மனநிலைகள், பல்வேறு நிலைப்பாடுகள், நெருங்கிய ஆளுமைகளின் மறைவுகள் பல்வேறு காலநிலை மாறுதல்கள்.. தொடர் இடர்கள், நிலையற்ற சூழ்நிலைகள், அடுத்தடுத்த முன்னெடுப்புகள், மாபெரும் இழப்புகள், சவால்கள் இவை அனைத்திற்கும் மத்தியில் வந்து நின்ற பொழுது, அப்போதைய மனநிலையில் இப்படைப்பு வீரியம் மாறி மாறி, தொடர்பற்று, உங்கள் அன்பை இழந்திருக்கக் கூட ஒரு வாய்ப்பிருந்திருக்கும். அல்லது முற்றிலும் பெற முடியாமல் தவித்திருக்கும். இவை எதுவும் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாது போனதாலேயே இந்த நீண்ட நெடிய விளக்கம். எல்லா கலை படைப்புமே எல்லாரையுமே திருப்தி படுத்திவிடுமா அப்படி பண்ண முடியுமான்னு தெரியல.. ஆனா அத பண்ண ஒவ்வொரு முறையும் கலை தன்னை தயார் செய்து கொள்ளும். அதனை முடிந்தவரை முயன்று முடிப்போம், முடியும் வரை முயல்வோம்” என்றார்.