அருண் விஜய் கடைசியாக பாலாவின் வணங்கான் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து கிரிஷ் திருக்குமரன் இயக்கும் ‘ரெட்ட தல’, தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களில் நடித்தார். இதில் இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அருண் விஜய்யின் 36வது படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை மான் கராத்தே, கெத்து உள்ளிட்ட படங்களை இயக்கி கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ளார். தன்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தில் தனுஷ் ஒரு மெலடி பாடல் பாடியுள்ளார். இப்பாடல் இன்னும் வெளியாகவில்லை.
படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டீசரில், இரண்டு கெட்டப்புகளில் அருண் விஜய் வருகிறார். அதில் ஒரு கெட்டப்பில் வில்லத்தனமான லுக்கில் ‘உபேந்திரா’ என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரை சுற்றித்தான் கதை நகர்வதாகத் தெரிகிறது. மேலும் அவருக்கான பில்டப்புகள் டீசர் முழுக்க இருக்கிறது. அதற்கேற்றவாறு, ‘கோவா பழைய கோவா மாதிரி இல்லை’ என பாலாஜி முருகதாஸ் கூற அதற்கு பின்னணியில் ‘கோவா பழைய கோவா இல்லைதான், ஆனா உபேந்திரா அதே பழைய உபேந்திரா தான், புலி என்னைக்குமே புலி தான்’ என்ற பதிலடி குரல் கேட்கிறது. ஆக்ஷன் ஜானரில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.