அருண் விஜய் கடைசியாக பாலாவின் வணங்கான் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து கிரிஷ் திருக்குமரன் இயக்கும் ‘ரெட்ட தல’, தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களில் நடித்தார். இதில் இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் அருண் விஜய்யின் 36வது படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை மான் கராத்தே, கெத்து உள்ளிட்ட படங்களை இயக்கி கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ளார். தன்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தில் தனுஷ் ஒரு மெலடி பாடல் பாடியுள்ளார். இப்பாடல் இன்னும் வெளியாகவில்லை. 

படம் தொடர்பாக ஒரு நிகழ்வில் பேசிய அருண் விஜய், என்னை அறிந்தால் படம் போல் இதிலும் தனக்கு ஒரு வசனம் இருப்பதாக சொல்லி அதை பேசி காண்பித்தார். நிகழ்வில் அவர் பேசியதாவது, “கதைக்கு இந்த தலைப்பு ரொம்ப பொருத்தமாக இருந்தது. அது உங்களுக்கு படம் பார்க்கும் போது தெரியும். எனக்கு என்னை அறிந்தால் படத்தில் ஒரு டயலாக் இருக்கும். ‘டேய் விக்டர், இவ்வளவு நடந்தும் நீ ஓடிக்கிட்டு இருக்கன்னா, இதுதான் உன் நேரம், போட்டுத்தாக்கு போட்டுத்தாக்கு’ என்ற டயலாக். எப்போது நான் கொஞ்சம் சோர்வாக நினைத்தாலும் இந்த டயலாக் என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். அப்போது தானாகவே ஒரு எனர்ஜி எனக்குள் வரும். அதே போல இந்த படத்திலும் ஒரு டயலாக் இருக்கு” எனச் சொல்லி,  ‘என்னை ஒரு போது குறைச்சி மதிப்பிடாத, நான் ஒரு அரிய வகை மனிதர்’ என்ற அர்த்தத்தில் குறிக்கும் டயலாக்கை ஆங்கிலத்தில் பேசி காண்பித்தார்.