தேசிய அளவில் மெடல்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 குத்துச்சண்டை வீர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கும் விதமாகத் தமது ஆதரவுக் கரத்தையும் நீட்டியிருக்கிறார் நடிகர் அருண் விஜய். ஒலிம்பிக்ஸ் கேம்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குத்துச்சண்டை சேம்பியன்ஷிப் போட்டிகளில் ரன்னர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடு பயிற்சியாளர் செந்தில்நாதனுக்கும் பாராட்டுக்களை அருண் விஜய் தெரிவித்தார். மேலும் விளையாட்டு வீரர்கள் பெற்ற வெற்றியைப் பாராட்டும் விதமாக அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார். அப்போது அவர் இதுகுறித்து பேசியபோது...

"இந்த வெற்றிக் களிப்பு 20 சாதனையாளர்களுடன் நின்றுவிடாது. நம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்குமான வெற்றி இது. என்னைப் பொருத்த வரை இந்த 20 பேரும் உண்மையிலேயே சாகசம் நிகழ்த்தியவர்கள். ஒரு விளையாட்டு வீரராகவோ, தடகள வீரராகவோ இருப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் குறிப்பாகக் குத்துச் சண்டை வீரரின் சாகசம் நிச்சயம் எளிதானதல்ல. அவர்கள் பெருமளவில் உடல் மற்றும் மன ரீதியாகத் தயாராகவேண்டியிருக்கும். ஒரு ஜென் துறவியின் மனப் பக்குவம் அவர்களிடம் இருக்க வேண்டும். தங்கள் செயல்பாட்டை திடீரென நிகழ்த்தும் ஆற்றல் அவர்களுக்கு அவசியமாகும். அதே சமயம் ஒவ்வொரு வினாடியையும் துல்லியமாக் கணித்துச் செயலாற்றவும் வேண்டும். தனிப்பட்ட முறையில் வெளியாகவிருக்கும் என்னுடைய, ‘பாக்ஸர்’ திரைப்படத்துக்காக நான் சில பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது.
அந்தப் பாத்திரத்தில் நடிக்க நான் மணிக்கணக்கில் பயிற்சி செய்தேன். ஆனால் இந்த வீரர்கள் தளராத முயற்சியோடு இரவு பகலாக, ஆன்மசுத்தியோடு வியர்வை சிந்துவதைப் பார்க்கும்போது உண்மையிலேயே திகைப்பாக இருக்கிறது. அதுவும் சில சமயங்களில் அவர்களுக்கான ஆதரவு என்பது மிகக் குறைவாக இருக்கும்போதும் அவர்களின் கடுமையான பயிற்சி வியப்பை ஏற்படுத்துகிறது. அவர்களை நேரில் சந்தித்துப் பாராட்டுக்களையும் ஊக்குவிப்பையும் அளிக்க விரும்பினேன்" என்றார். அருண் விஜய் தற்போது ‘அக்கினிச் சிறகுகள்’, ‘பாக்ஸர்’, மற்றும் ‘மாஃபியா’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார். அவை ஒவ்வொன்றும் தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில் இருக்கின்றன.