தமிழில் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. அந்த வகையில் அருள்நிதி நடிப்பில் நேற்று (22.07.2022) 'தேஜாவு' படம் திரையரங்குகளில் வெளியானது. சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே அறிமுக இயக்குநர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் 'டைரி' படத்தில் நடித்துள்ளார். '5 ஸ்டார் க்ரியேஷன்ஸ்' சார்பாக கதிரேசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரான் எத்தன் யோஹன் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 'டைரி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.