அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'டிமான்ட்டி காலனி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதலில் அஜய் ஞானமுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க, வெங்கி வேணுகோபால் இயக்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்பு அஜய் ஞானமுத்துவே இயக்குவதாக அறிவிக்கப்பட்டு மொத்த படப்பிடிப்பும் கடந்த ஆண்டு ஜூனில் முடிக்கப்பட்டது. சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்தின் மேக்கிங் வீடியோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. மேலும் ட்ரைலர் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது. அப்போது விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.
ஏற்கனவே ஆகஸ்ட் 15ல் பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியின் தங்கலான், பிரஷாந்த் நடிப்பில் நீண்ட காலம் உருவாகி வந்த அந்தகன் உள்ளிட்ட படங்கள் வெளியாகிறது. இந்த படங்களுடன் டிமான்ட்டி காலனி 2 படமும் வெளியாவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.