சர்ச்சையை ஏற்படுத்திய திரைப்படம் - பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் சிறப்பு சலுகை

article 370 movie tax free in madhya pradesh

ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியா மணி, அருண் கோவில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாத 23ஆம் தேதி வெளியான படம் ‘ஆர்டிக்கிள் 370’. பி62 ஸ்டூடியோஸ், தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்திற்கு ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் வெளியாவதற்கு முன் படம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “மக்கள் சரியான தகவலைத் தெரிந்துகொள்ள இப்படம் உதவும். அது நல்ல விஷயம்” என்றார். இப்படம் ட்ரைலர் வெளியான பிறகும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்திற்கு வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டது. படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மத்தியப்பிரதேச அரசு இப்படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது. இதனை மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “சட்டப்பிரிவு 370-ன் கசப்பான யதார்த்தத்தை மாநில குடிமக்கள் அறியும் வகையில், மத்தியப் பிரதேசத்தில் ஆர்டிக்கிள் 370 திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் மோடி ஜம்மு - காஷ்மீரில் இருந்து பிரிவு 370-ஐ நீக்கியதன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சிக்கான மகத்தான சாத்தியக்கூறுகளை திறந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் கடந்த கால மற்றும் நிகழ்கால சூழ்நிலைகளை நெருக்கமாக புரிந்து கொள்ள இந்த படம் உதவுகிறது” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய “தி கேரளா ஸ்டோரி” படத்திற்கும் மத்தியப் பிரதேசத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Bollywood Madhya Pradesh
இதையும் படியுங்கள்
Subscribe