பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மீது மலேசியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐ.ஜீ குளோபல் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடுத்தது.
அந்நிறுவனம் கொடுத்த மனுவில், ‘எங்கள் நிறுவனத்துடன் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் திரைப்படங்களை வாங்கி வெளியிட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. பின்பு வியாபார தேவைகளுக்காக தங்கள் நிறுவனத்திடம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல்வேறு தவணைகளில் ரூ.26 கோடி கடன் கொடுக்கப்பட்டது. இந்த கடன் தொகைக்கு விற்பனை ஒப்பந்தப் பத்திரம், கடன் பத்திர உத்தரவாதம் உள்ளிட்ட பத்திரங்கள் அடமானம் கொடுக்கப்பட்டது.
ஆனால், கடன் தொகைக்காக தங்கள் நிறுவனத்திற்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய காசோலைகள் வங்கியில் பணமில்லாமல் திரும்பி வந்ததுள்ளது. அதனால் இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. அதனால் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. மேலும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமியை அக்டோபர் 3 தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
1980-களில் தொடங்கி பல்வேறு படங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தேனாண்டாள் ஸ்டூடியோஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. பெரிய பட்ஜெட்டில் கடைசியாக விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்திருந்தது. பின்பு சிறு பட்ஜெட்டில் மட்டுமே அதுவும் குறைவான படங்களை மட்டுமே தயாரித்து வருகிறது.