armstrong case nelson wife monisha under police investigation

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி மாலை வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கியமான நபர்களை காவல் துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். பின்பு இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்போ செந்தில் தாய்லாந்துக்குச் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த கொலை தொடர்பாக தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில், அவரது தந்தையான பிரபல ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்திய அடிப்படையில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை ஆந்திராவில் கைது செய்தனர் தனிப்படை போலீசார். அவரை செப். 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

ஒவ்வொரு நாளும் இந்த வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தேடப்படும் குற்றவாளி ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அடுத்தகட்டமாக நெல்சனிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் நெல்சனின் மனைவி மோனிஷாவும் மொட்டை கிருஷ்ணனும் சென்னை நட்சத்திர விடுதியில் சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மோனிஷாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் மொட்டை கிருஷ்ணனுக்கு சென்றிருப்பதாகவும் அந்த பணம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் மோனிஷாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர் தனிப்படை போலீசார். அதோடு மொட்டை கிருஷ்ணனுடன் மோனிஷா செல்போனில் உரையாடியது தொடர்பாகவும் விசாரத்தினர். அப்போது மொட்டை கிருஷ்ணன் தனது பள்ளி காலத்து நண்பர் என்று தெரிவித்த மோனிஷா, அவர் வழக்கறிஞராக இருப்பதால் வழக்கு தொடர்பாகப் பழக்கம் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் நண்பர் என்ற முறையில் அவர் பணம் கேட்டதால் அனுப்பியதாகவும் அவருக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பிருப்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.