arjun das about ajith regars he joined the good bad ugly movie

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. லைகா தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை அடுத்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரசன்னா இப்படத்தில் நடித்து வருவதாக சமீபத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தில் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட குறிப்பில், “நடிப்பு என்ற கனவைத் தொடர முதன் முதலில் சென்னை வந்தபோது, ​​எப்படி, எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை. சுரேஷ் சந்திரா என்னை அவரது குழுவில் ஒரு அங்கமாக இருக்க அனுமதித்தார். அந்தளவிற்கு அன்பாக இருந்தார். இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை சந்திக்கவும் வாய்ப்புகளைத் தேடவும் அந்த குழு சிறந்த வழியாக இருந்தது. அந்த நேரத்தில் அஜித் சாருடன் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவரது படப்பிடிப்பு தளத்தில் அவரைப் பார்க்கச் செல்வது முதல், அவர் கூட்டங்களில் கலந்துகொள்ளச் சென்றபோது அங்கு இருப்பது வரை, அவருடைய திரைப்படங்களின் மார்கெட்டிங் மற்றும் புரொமோஷன்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டேன்.

Advertisment

arjun das about ajith regars he joined the good bad ugly movie

எல்லாம் நேற்று நடந்தது போல் உணர்கிறேன். நம்பினால் நம்புங்கள், வீரம் படத்தின் டீசரை ஆன்லைனில் பதிவேற்றியது நான்தான். இத்தனை வருடங்களாக மாறாமல் இருப்பது அஜித் சாரின் குணமும் பெருந்தன்மையும் தான். அவர் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அவர் தனது ஒவ்வொரு படத்திலும் எனக்காக எப்போதும் ஒரு வார்த்தையை சொல்வார். மாஸ்டருக்குப் பிறகு அவர் என்னைக் கூப்பிட்டு ‘அர்ஜுன் நாம் இருவரும் விரைவில் இணைந்து வேலை செய்வோம்’ என்று சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது இறுதியாக நடந்ததில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். நான் அவருடன் நடிக்கிறேன் - ஒரு கனவு நனவான தருணம். அவரது அலுவலகத்தில் வேலை செய்வதிலிருந்து அவருடன் திரையைப் பகிர்ந்துகொள்வது வரை வாழ்க்கை முழுவதுமாக வந்துவிட்டது போல் உணர்கிறேன்.

அஜித் சார், என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் வாழ்வேன் என்று நம்புகிறேன். இது உங்களுக்காக அஜித் சார்” என்றார்.

Advertisment

அர்ஜுன் தாஸ் கைதி படம் மூலம் பிரபலமானார். பின்பு பின்பு விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடைசியாக சாந்த குமார் இயக்கத்தில் ரசவாதி படத்தில் நடித்திருந்தார். இப்போது ஒன்ஸ் மோர் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது.