பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார். அப்போது அவரை மரியாதை நிமித்தமாக தனது குடும்பத்துடன் சந்தித்துள்ளார் நடிகர் அர்ஜுன்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய கோவிலுக்கு அவரை அழைத்திருக்கிறேன். விரைவில் வருவதாக சொல்லியிருக்கிறார். நான் பிஜேபியில் இணையவில்லை. முதலில் அரசியல் நமக்கு தெரியாது. முதல் தடவை அவரை சந்திக்கிறேன். எனக்கு பிடித்த ஒரு ஆளுமை. எனது குடும்பத்திலும் மோடி என்றால் ரொம்பப் பிடிக்கும்” என்றார். சென்னை கெருகம்பாக்கதில் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.