‘ஒரு நொடி’ படத்திற்குப் பிறகு அதே படக்குழுவினர் இணைந்துள்ள படம் ‘ஜென்ம நட்சத்திரம்’. ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன். இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப் படம் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் இயக்குநர் அறிவழகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “என் நண்பர் கேபிள் சங்கர் இந்த படக்குழு படத்தை சிறப்பாக செய்திருப்பதாக சொன்னார். மேலும், இந்தப் படம் ஹாரர் ஜானரில் உருவாகி இருப்பதால் என்னையும் இங்கு அழைத்திருக்கிறார்கள். ‘ஜென்ம நட்சத்திரம்’ என்பது கிளாசிக் ஹாரர் ஹிட். அதே டைட்டிலில் படமும் உருவாகி இருக்கிறது.
ஹார் ஜானரில் நிறைய சப் கேட்டகிரி இருக்கிறது. ஆனால், என்னைப் பொருத்தவரை எழுத்து மற்றும் அதை எப்படி திரையில் கொண்டு வருகிறோம் என்பதுதான் திரைப்படத்திற்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். இந்தப் படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது ‘ஜென்ம நட்சத்திரம்’ பிராப்பர் ஹாரர் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு விருந்தாக அமையும். ஹாரர் படங்களுக்கு காட்சிகள் மட்டுமே முக்கியமல்ல, அதை உருவாக்குவது மிகப்பெரிய சவால். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், கலை இயக்குநர் மற்றும் குழுவினர் என அனைவரின் ஒத்துழைப்பும் முயற்சியும் முக்கியம். குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.