/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/32_105.jpg)
ஈரம் படத்திற்கு பிறகு இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சப்தம்’. 7ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் ஒலியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் அறிவழகன் பேசுகையில், “நீண்ட இடைவேளைக்குப் பிறகு, என்னுடைய படம் தியேட்டருக்கு வருகிறது. ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து புதுமை செய்தது போல், இப்படத்தில் சவுண்ட் வைத்துச் செய்யலாம் என்ற போது, நிறைய சவால்கள் இருந்தது. ஈரம் படம் இப்போது வரை டெக்னிகலாக பாராட்டப்படும் படம். தண்ணீரில் ஹாரர் எனும் போது, அந்த ஆவியின் உருவத்தைக் காட்டுவது, மிக எளிதாக இருந்தது. ஆனால் சவுண்டை வைத்து பேயை காட்டுவது எப்படி என, கதை எழுதும் போதே சவாலாக இருந்தது. சவுண்டில் தியேட்டரில் டால்ஃபி சவுண்ட் புரமோ வருமல்லவா, அந்த குவாலிட்டியை திரையில் கொண்டு வர திட்டமிட்டோம். 7ஜி சிவா இப்படத்திற்கு மிக உறுதுணையாக இருந்தார், இந்தப்படத்தின் பட்ஜெட் பெரிதான போது, இந்தப்படத்தின் டெக்னிகல்களை புரிந்து கொண்டு, இப்படத்திற்கு முழு ஆதரவாக நின்றார். அவர்கள் ஏற்கனவே டிஸ்டிரிபூசனில் இருந்ததால் படத்தினை பற்றிய முழு புரிதல் அவரிடம் இருந்தது. படம் கேட்கும் அனைத்து செலவுகளையும் செய்யுங்கள் என்றார். அவரால் தான் இந்தப்படம் இந்த அளவு தரத்துடன் வந்துள்ளது அவருக்கு என் நன்றி.
ஆடியோகிராஃபர் உதயகுமார் என்னுடன் பல காலமாக வேலை பார்த்து வருகிறார். எடிட்டர் சாபு, ஒளிப்பதிவாளர் அருண், இசையமைப்பாளர் தமன் எல்லோரும் இணைந்து இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். மற்ற ஹாரர் படத்திலிருந்து இந்தப்படத்தில் என்ன வித்தியாசம்? ஹாரரில் பல ஜானர்கள் இருக்கிறது எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஈரம் படம் உங்களை ஒரு அனுபவத்திற்குள் கொண்டு சென்றது போல, இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தில் புளூ டோன் வைக்கலாம் என்றார், அது மிக வித்தியாசமாக இருக்கும். சாபு ஜோசப் அவரும் இப்படத்தில் நிறைய புதுமைகள் செய்துள்ளார். படத்தில் என் வியூ தவிர அவரோட வியூ எப்படி இருக்கிறது எனப் பார்ப்பேன், அதில் அவர் கடினமாக உழைத்துள்ளார்.
ரொம்ப நாட்களாக ஆதி சாரும் நானும் வேலை செய்ய, பேசி வந்தோம், இந்தப்படத்தை கதை சொன்னவுடன் செய்யலாம் என்றார், அவர் தயாரிப்பில் ஃபர்ஸ்ட் காப்பியில் இப்படத்தைச் செய்துள்ளேன், தமனை நிறையத் தொந்தரவு செய்துள்ளேன், ஆனால் அதை எல்லாம் கடந்து, அவர் பின்னணி இசை வரும் போது பிரமிப்பாக இருந்தது. நாம் நினைத்த கதையை ஒருவர் நம்பி உள்ளே வர வேண்டும், அது தான் எனக்கு கம்ஃபடபிள், ஆதி என்னை நம்பி உள்ளே வந்தார். இந்தப்படம் மிகவும் வித்தியாசமான ஹாரர் அனுபவமாக இருக்கும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)