
இந்நிய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான், சமீபத்தில் வெளியான தனுஷின் ராயன் படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் அவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஜெயம் ரவியின் ‘ஜீனி’, கமல் ஹாசனின் ‘தக் லைஃப்’, தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் திருவள்ளூர் கவரப்பேட்டையில் உள்ள தனது ஏ.ஆர்.ஆர். ஃபிலிம் சிட்டியில் ‘மெய்நிகர் தொழில்நுட்பம்’ அடங்கிய ஸ்டூடியோவை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் மணிரத்னம், சுதா கொங்கரா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான் ‘மெய்நிகர் தொழில்நுட்பம்’ குறித்து பேசினார்.
அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், “மெய்நிகர் தொழில்நுட்பம் போன்ற செயற்கை நுண்ணறிவால் சினிமா தொழிலாளிகளின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக விமர்சனம் எழுகிறது” என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளிக்கையில், “இந்த தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்தப் போகிறோம். மக்களுக்கு சினிமா மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. அதை அதிகப்படுத்த பிரம்மாண்டமான சினிமா செட் தேவைப்படும். ஆனால், சிறிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களால் அதை செய்ய முடியாது.
அதை எளிய முறையில் உருவாக்கி கொடுக்கத்தான் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது. இதை உபயோகிக்க யாரும் பயப்பட வேண்டாம். எல்லோரும் கையாளும் வகையில் நல்ல விதமாக இது இருக்கும். ஒரு இடத்தில் 20 நாள் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்றால் வெறும் 3 நாட்களில் தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றதை செயற்கை நுண்ணறிவு மூலம் கிராஃபிக்ஸாக உருவாக்கி கொள்ளலாம்” என்றார்.