
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பல்வேறு மொழிகளில் பின்னணி பாடகராக வலம் வருகிறார். தமிழில் மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி', ஷங்கரின் '2.0' உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியுள்ளார். தமிழ் அல்லாது இந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், மும்பையில் பாடல் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு அதில் நூலிழையில் உயிர் தப்பியதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று நான் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது ஆன்மிக ஆசிரியருக்கும் நன்றி கூறுகிறேன். மூன்று நாட்களுக்கு முன்பு நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன். அங்கு கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தேன்.
அப்போது மேடையில் நடுவில் நின்று கொண்டிருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. நூலிழையில் உயிர் தப்பினோம். அங்கும் இங்கும் சில நகர்ந்திருந்தாலோ அல்லது சில நொடிகள் முன்னரோ பின்னரோ விபத்து நடந்திருந்தாலோ அந்த மொத்த அலங்கார விளக்குகளும் எங்கள் தலையில் விழுந்திருக்கும். அந்த சம்பவத்தினால் நானும் எனது குழுவும் அதிர்ச்சி அடைந்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவிற்கு ஏ.ஆர் ரஹ்மான், "உயிர் தப்பியது இறைவனின் அருள்" என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும், நாம் நமது தொழில்துறையை வளர்க்கும்போது, படப்பிடிப்புத் தளம் மற்றும் சுற்றுப்புறங்களை உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்புத் தரத்திற்கு மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் லைட்மேன் ஒருவர் விபத்தில் சிக்கி இறந்தார். அந்த சம்பவம் காரணமாக இறந்தவரின் குடும்பத்தாருக்கு மற்றும் இனிவரும் காலங்களில் விபத்தால் பாதிக்கப்படும் லைட்மேன் சங்கத்தை சார்ந்தவருக்கு உதவி செய்யும் வகையில் வருகிற 19 ஆம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். இந்த சூழலில் அவரது மகனுக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.