/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/195_14.jpg)
உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விழா வருகிற 12 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவில் போட்டியிடுகிறது. இந்தியாவில் டெல்லியின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஆல் தட் பிரீத்ஸ் (All That Breathes) என்கிற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படங்களுக்கான பிரிவிலும், தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' (The Elephant Whisperers) ஆவணக் குறும்படப் பிரிவிலும் போட்டியிடுகிறது.
முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற ஆங்கில படத்திற்காக சிறந்த பின்னணி இசை (Best Original Score)மற்றும் சிறந்த பாடல் (Best Original Song) ஆகிய பிரிவில் 81வது ஆஸ்கர் விழாவில் விருது வாங்கினார். மேலும் ஆஸ்கர் விருது வாங்கிய முதல் தமிழர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த நிலையில் அந்த விழாவில் விருது பெற்ற தருணத்தை ஏ.ஆர். ரஹ்மான் தற்போது பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்கர் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், "முதலில் பின்னணிஇசை விருதுக்காக என் பெயரை அறிவித்தபோது, இது கனவா அல்லது உண்மையா என நினைத்தேன். அடுத்து நான் மேடையில் பாட இருந்ததால் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் இருந்தேன். பின்பு மேடையில் பேசுகையில் நான் எதுவும் முன்னெச்சரிக்கையாக தயார் செய்யவில்லை. இயல்பாக என்ன வருகிறதோ அப்படியே பேசினேன்.
இடையில் கீழே உட்கார்ந்திருக்கையில் விருது பெற்ற ஒரு நடிகை மேடையில் ஸ்பானிஷ் மொழியை பேசினார். அதை பார்க்கையில் நல்லாயிருந்தது. பின்பு நானும் தமிழில் பேசினேன். கடவுள் பொதுவானவர். சந்தோஷமான தருணங்களில் அவரை நினைத்தால், துக்க தருணங்களிலும் நினைக்க வேண்டும். நான் அப்போது சந்தோஷ தருணத்தில் இருந்தேன். அதனால் கடவுளை நினைத்து கொண்டேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)