
சென்னை அண்ணா சாலையில் ஹஸ்ரத் சையத் மூஸா ஷா காதரி தர்காவில் சந்தனக்கூடு கொடியேற்றும் விழா நேற்று நடைபெற்றது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தலைமை காஜி முகமது அக்பர் சாஹிப் நேற்று இரவு கலந்து கொண்டனர்.
இதனையடுத்து அங்கு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. பின்பு அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மற்ற மதத்தை சார்ந்தவர்களும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில் சிம்புவின் 'பத்து தல', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.