உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா 302, கேரளா 241, தமிழகம் 124, டெல்லியில் 120, உத்தரப்பிரதேசம் 103, தெலங்கானா 94, ராஜஸ்தான் 93 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் கரோனா பாதிப்பால் 38 பேர் உயிரிழந்த நிலையில், 133 பேர் குணமடைந்துள்ளனர்.இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், "அன்பார்ந்த நண்பர்களே,
சுயநலமின்றி, தைரியமாக மருத்துவமனைகளில் வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லவே இந்த செய்தி. இந்த மோசமான தொற்று பரவிக்கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் இதைக் கையாள எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்று பார்க்கும்போது மனது நிறைந்துவிட்டது.நம் உயிரைக் காப்பாற்ற அவர்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர்.
உலகைத் தலைகீழாக மாற்றியுள்ள இந்தக் கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிராக நாம் நம் வித்தியாசங்களை மறந்து ஒன்றிணையும் நேரமிது. மனிதம், ஆன்மிகம் ஆகியவற்றின் அழகைச் செயலில் கொண்டு வரும் நேரம் இது.நமது அண்டை வீட்டில் இருப்பவர்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு, வசதி வாய்ப்பில்லாதவர்களுக்கு, புலம் பெயர்ந்த பணியாளர்களுக்கு உதவுவோம்.
கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார் (அதுதான் மிகப் பரிசுத்தமான கோயில்). எனவே மத வழிபாட்டு இடங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல. அரசாங்கத்தின் அறிவுரையைக் கேளுங்கள்.சுய தனிமையில் சில வாரங்கள் இருந்தால் பல வருடங்கள் ஆயுள் கிடைக்கும். இந்தத் தொற்றைப் பரவி சக மனிதருக்குத் தீங்கு ஏற்படுத்தாதீர்கள். இந்தக் கிருமி உங்களிடம் இருக்கிறது என்பதைக் கூட உங்களுக்கு எச்சரிக்காது.எனவே உங்களுக்குத் தொற்று இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். வதந்திகளைப் பரப்பி இன்னும் பதட்டத்தையும் கவலையையும் பரப்பும் நேரம் இது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.