
பொன்னியின் செல்வன் பட இரண்டாம் பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘வீரா ராஜ வீர...’ பாடல் சர்ச்சையில் சிக்கியது. இப்பாடலுக்கு எதிராக கர்நாடக இசை பாடகர் வாசிஃபுதீன் தாகர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் காப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இப்பாடல் தன் தந்தை இயற்றிய சிவா ஸ்துதி பாடல் போல் உள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலாக ‘வீரா ராஜ வீர’ பாடலை உருவாக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில் வீரா ராஜ வீர பாடல் சிவா ஸ்துதி பாடலில் இருந்து உந்துதல் பெற்று உருவாக்கியது மட்டுமல்லாமல் அதை போன்றே இருப்பதாக கூறி ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழு தரப்பினருக்கு ரூ.2 கோடி நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மனு தாரர் தரப்பிற்கு படக்குழு தரப்பு ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.