/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/148_28.jpg)
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல சர்ச்சையைக் கிளப்பியது.
கலவையான விமர்சனத்தை இப்படம் பெற்ற நிலையில் உலகம் முழுவதும் ரூ.238 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்த படத்திற்குத்தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரள ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன. மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத்தடை விதித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. உண்மை சம்பவத்தைத்தழுவி இப்படம் எடுத்துள்ளதாகப் படக்குழு குறிப்பிட்ட நிலையில் இப்படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் மீண்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியில்படம் இயக்கவுள்ளார்.
பிரபல தொழிலதிபரும் சகாரா குழுமத்தலைவருமான சுப்ரதா ராயின் வாழ்க்கை வரலாற்றை 'சஹாரா ஸ்ரீ’(SAHARASRI) என்ற தலைப்பில் படமாக இயக்கவுள்ளார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சந்தீப் சிங் தயாரிக்கிற இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சுப்ரதா ராய், தனது நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத்திருப்பிக் கொடுக்கத்தவறியதாகக் கூறி 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்பு டெல்லி திகார் ஜெயிலில் 2 வருடம் சிறைத்தண்டனை பெற்று பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர். ரஹ்மான் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்', ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்புத்தோற்றத்தில் நடித்து வரும் 'லால் சலாம்', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)